தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர், “கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தை ஆலோசிக்காமல் தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்காமல் சென்ற 10.12.2022 ஆம் தேதி முதல் செய்து வரும் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெற வாரிய உறுப்பினரின் வயது தவிர வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து கடந்த முறை பொங்கலுக்கு வழங்கியது போல் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்புத் தொகுப்பும் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தியும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து ஓய்வூதியமும் வழங்க வேண்டும். நல வாரியத்தில் சலுகை உதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும்” எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமைத் தாங்கினார். துணைத் தலைவர்கள் முருகேசன், நடராஜ், சரோஜா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.