ஹைதராபாத்தில் தெலுங்கு மூத்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் மற்றும் அவரது மகன் ராஜா கௌதம் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கு மூத்த நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் இவர் பேரக் குழந்தைகள் குறித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரஞ்சீவி பேசியதாவது, “நான் வீட்டில் இருக்கும்போது, என் பேத்திகள் என்னைச் சுற்றி இருக்கும் போது, நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன் போல் உணர்வேன். அதனால் ராம் சரணிடம் நான் ஆசைப்படுவது, இந்த முறையாவது, நம் மரபு தொடர ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்பதுதான். ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயமும் எனக்கு இருக்கிறது” என்றார். இது தற்போது சமூக வலைதளங்களில் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. பெண் குழந்தை பிறந்தால் என்ன பயம், அவருக்கும் ஆணைப் போல் வழிநடத்தும் திறன் இருக்கும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
சிரஞ்சீவிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் ராம் சரண், உபாசனா காமினேனியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு 10 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.