Skip to main content

“பவதாரிணியின் கடைசி ஆசை” - உருக்கமுடன் பகிர்ந்த இளையராஜா

Published on 13/02/2025 | Edited on 13/02/2025
ilaiyaraaja speech at bhavadharini Memorial meet

பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்து ஓராண்டு கடந்த நிலையில் அவரின் நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று(12.02.2025) நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் இளையராஜா பேசுகையில்,  “பவதாவுடைய ஒரு ஆண்டு நினைவு நாள் இன்று. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாப்பாவுடைய பிறந்தநாளும் இன்றுதான். அதோடு பாப்பாவுடைய திதி நாளும் இன்றுதான். திதியும் பிறந்தநாளும் ஒரே நாளாக வருவது யாருக்கும் நடந்ததில்லை. பாப்பாவுடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். 

பவதா இறப்பதற்கு முன்னால் என்னுடன் அவர் கழித்த நாட்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாது. பவதாவின் கடைசி ஆசை பெண்கள் ஆர்கெஸ்ட்ராவை உருவாக்குவதுதான். இரண்டு நாட்கள் முன்பு மலேசியாவில் இருக்கும் பொழுது மாணவிகள் குழுக்களாக வந்து ஆர்கெஸ்ர்டா மூலம் பாடினார்கள். அதை பார்த்தவுடன் பவதா சொன்னது ஞாபகம் வந்தது. அதனால் பவதாவுடைய பெயரில் பெண்கள் ஆர்கெஸ்ட்ரா குழு ஆரம்பிக்கவுள்ளேன். இதில் 15 வயதுக்கு மேற்படாத மாணவிகள் மட்டுமே இருப்பார்கள். மலேசியாவில் இரண்டு ஆர்கெஸ்ட்ராக்களை தேர்ந்தெடுத்துள்ளேன். 

உலகில் எந்த மூளையில் இருந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ராவில் பணி புரியலாம். இசை விருந்தை என்றென்றும் வழங்கும் திட்டத்தில் இந்த ஆர்கெஸ்ட்ராவை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். அதை சரியான நாள் வரும் போது அறிவிப்பேன். ஆடிஷன் வைத்து தான் மாணவிகளை தேர்ந்தெடுப்பேன். பவதாவுடைய பெயரை என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இந்த இசைக்குழு தொடங்கி உலகம் முழுவதும் பரவும் என்று நம்புகிறேன்” என உருக்கமுடன் முடித்தார். 

சார்ந்த செய்திகள்