
''கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... மொட்டையாண்டி க்கு அரோகரா...'' என்ற கோஷத்துடன் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காரைக்குடி, தேவகோட்டை, மேலூர், மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, கம்பம், போடி, தேனி, பெரியகுளம், திருச்சி, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக தைப்பூசத்திற்கு பழனிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இப்படி பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு அங்கங்கே இட்லி, தோசை சாப்பாடு மற்றும் பிஸ்கட், பழங்கள், கூல்ட்ரிங்க்ஸ் உட்பட உணவுப் பொருட்களை பொதுமக்கள் காலங்காலமாக வழங்கி வருவது வழக்கம். அதனாலயே 200 கிலோமீட்டர் 300 கிலோ மீட்டர் இருந்து நடந்து வரும் முருக பக்தர்கள் வழிநெடுக பொதுமக்கள் கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு பழனி முருகனை தரிசித்து விட்டு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திடீரென பாதயாத்திரை வரும் முருக பக்தர்களுக்கு உணவுகள் வழங்கும் பொதுமக்கள் முன் அனுமதிபெற்று தான் வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போட்டு இருப்பதால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியும் ஏற்பட்டு இருக்கிறது.

தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக நடந்து வரும் முருக பக்தர்களுக்கு வழக்கம்போல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை அறிய நாமும் முருக பக்தர்களிடம் விசாரணையில் இறங்கினோம். வருடந்தோறும் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் போது வழிநெடுக மக்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வையம்பட்டியில் கால் வைத்ததில் இருந்தே சரிவர பொதுமக்கள் அன்னதானம் கொடுப்பதை பார்க்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் வந்தபோது தான் பழனி ரோட்டில் ஒரு கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்கப்படுவதாக மைக்கில் அறிவித்ததை தொடர்ந்து நானும் என்னுடன் வந்த பத்து சாமிகளும் சேர்ந்து சாப்பிட்டு வந்தோம்.

அப்போது பழங்களும் கொடுத்தனர் அதை இரவு சாப்பாட்டிற்கு வைத்துக் கொண்டோம். ஆனால் இந்த வருடம் அன்னதானம் இந்த மாவட்டத்தில் குறைவாகத்தான் இருந்தது என்றால் திருச்சி கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருக பக்தர் வேலுமணி.

இது சம்பந்தமாக வடலூரைச் சேர்ந்த முருக பக்தர் கல்விக்கனியிடம் கேட்டபோது,''எங்க ஊர் பக்கம் எல்லாம் எப்பொழுதும் போலவே என்னைப் போல் நடந்து வரும் பக்தர்களுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு மற்றும் டீ, பிஸ்கட், தண்ணீர், கூல்டிரிங்ஸ் எல்லாம் கொடுத்தனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வந்த போதுதான் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் குறைவாக இருப்பதை கண்டு அனுமதி வாங்கித்தான் பக்தர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு போட்டு இருப்பதால் தான் பொதுமக்களும் எங்கே போய் அனுமதி வாங்குவது பேசாமல் அன்னதானம் போடாமல் விட்டுவிடுவோம் என்று தான் பலர் போடவில்லை என்று சொன்னார்கள். முருக பக்தர்களுக்கு அன்னதானம் போட கூட அனுமதி வாங்குவத புதிதாக இருக்கிறது'' என்று கூறினார்.

கடந்த 25 வருடமாக எங்க ஊரிலிருந்து நூறு பேர் வரை ஏழு நாட்களுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனை தரிசித்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடம் 150 கி.மீட்டரை தாண்டி நடந்து வந்து கொண்டு இருப்பதின் மூலம் தைப்பூசத்திற்கு முதல் நாள் சாமியை பார்த்துவிடுவோம். ஆனால் இந்த வருடம் பக்தர்களுக்காக போடப்பட்டு இருந்த நடை பாதையெல்லாம் ரோட்டை விரிவுபடுத்துவதற்காக எடுத்துவிட்டனர். இதனால் ரோட்டில் தான் போக்குவரத்து வாகனங்களுக்கு இடையே தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடந்து செல்கிறோம். இதில் கடந்த வருடம் முருக பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒளிரும் குச்சிகளை போலீசார் கொடுத்தனர். அதேபோல் இந்த வருடமும் கொடுக்க வேண்டும். அதோடு உணவு வழங்குவதற்கு கட்டுப்பாடு போட்டிருப்பதாக கேள்விப்பட்டோம். அதனாலயே அன்னதானமும் வழக்கம்போல் இல்லாமல் இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் முருக பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் கொடுக்கிறார்கள் என்றால் தரமில்லாமல் கெட்டுப்போன உணவு வகைகளை கொடுக்க மாட்டார்கள். தரமான உணவுகளைத்தான் கொடுப்பார்கள் அதற்கு போய் அனுமதி வாங்குவது என்பது புதிதாக இருக்கிறது.
காலம் காலமாக அன்னதானம் வழங்குவது நடைமுறையில் இருந்து தான் வருகிறது. இதன்மூலம் எந்த ஒரு வருடமும் முருக பக்தர்களுக்கு உணவுப் பொருட்கள் மூலம் பாதிப்பு வந்ததில்லை. அப்படியிருக்கும்போது அரசு இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வந்தது வருத்தமாகத்தான் இருக்கிறது என்றனர் நெய்வேலி, ஊத்தங்காலை சேர்ந்த முருக பக்தர்களான செல்வராஜ், சரவணன், முருகேசன்.

இது சம்பந்தமாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணியிடம் கேட்டபோது, ''பாதுகாப்பான உணவுகளை பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்குவதற்காகத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். சென்ற வருடம் 100 பேர் தான் அன்னதானம் வழங்குவதற்கு முன்பதிவு செய்து இருந்தார்கள். இந்த வருடம் 300 பேர் வரை பதிவு செய்துள்ளார்கள் ஆனால் அனுமதி இல்லாமல் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது'' என்று கூறினார்.
இது சம்மந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, ''வருடந்தோறும் தைப்பூசத்திற்காக பாதயாத்திரை வரும் முருக பக்தர்கள் இரவிலும் நடந்து செல்கிறார்கள். இப்படி செல்லக்கூடிய முருக பக்தர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒளிரூட்டும் குச்சியும் கொடுத்து அவர்கள் கொண்டு வரும் பேக் மற்றும் கைப் பைகளில் ஸ்டிக்கரும் ஒட்டி வருகிறோம். அதேபோல் இந்த வருடம் மாவட்டத்தின் எல்லைகளான வையம்பட்டி, வேடசந்தூர், கொடைரோடு, கொடைக்கானல் பிரிவு, பழனி பைபாஸ் உள்பட ஐந்து இடங்கள் வழியாக நடந்து வரும் முருக பக்தர்களுக்காக ஐம்பதாயிரம் ஒளிரும் குச்சிகள் பாதுகாப்புக்காக இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர்கள் கொண்டு வரும் பொருட்களின் மீது ஸ்டிக்கரும் ஒட்டி வருவதால் முருக பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக நடந்து சென்று முருகனை தரிசித்து விட்டு செல்கிறார்கள்'' என்று கூறினார்.