![Grandson stabs famous businessman to passed away 73 times in telangana](http://image.nakkheeran.in/cdn/farfuture/IIupu1zuDi_qJZm1prajDfKdKrW7lM992e62csXtMJM/1739259203/sites/default/files/inline-images/velmathn_0.jpg)
தெலுங்கானா மாநிலம், ஹைதாரபாத் சோமாஜிகுடா பகுதியைச் சேர்ந்தவர் வேல்மத் சந்திரசேகர் ஜனார்த்தன ராவ் (86). இவர், அம்மாநிலத்தில் பிரபல தொழிலதிபர் ஆவர். மேலும், வேல்மத் குழுமத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரை, அவரது பேரன் கீர்த்தி தேஜா கொடூரமாக கொலை செய்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்த ஜனார்த்தன ராவ்வின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜனார்த்தன ராவ்வின் வீட்டில் படுகாயமடைந்து கிடந்த அவரது மகள் சரோஜினி தேவியையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தன ராவ்வின் பேரன் கீர்த்தி தேஜாவை கைது செய்து விசாரணை செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு ஜனார்த்தன ராவ், தன்னுடைய சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு பிரித்து வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தனது மூத்த மகளின் மகனான ஸ்ரீகிருஷ்ணாவை, வேல்மத் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தார். அதே போல், தனது இளைய மகளான சரோஜினி தேவியின் மகன் கீர்த்தி தேஜாவுக்கு (29) ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வழங்கியுள்ளார். தனக்கு குறைவான சொத்துக்கள் மட்டுமே கொடுத்ததாக கீர்த்தி தேஜா நினைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு சரோஜினி தேவியும், மகன் கீர்த்தி தேஜாவும் ஜனார்த்தன ராவ் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது சொத்து விவகாரம் தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கீர்த்தி தேஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாத்தா ஜனார்த்தன ராவை 73 முறை சரமாரியாக குத்தியுள்ளார். ஜனார்த்தன ராவ்வின் அலறல் சத்தத்தை கேட்டு தடுக்க வந்த தாய் சரோஜினி தேவியையும், கீர்த்தி தேஜா சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், ஜனார்த்தன ராவ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சரோஜினி தேவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கீர்த்தி தேஜா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அமெரிக்காவில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் ஹைதராபத்துக்கு வந்த கீர்த்தி தேஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தொழிலதிபரை அவரது பேரன் 73 முறை கொடூரமாகக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.