Skip to main content

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல்!

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

New Income Tax Bill tabled in Lok Sabha

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ஆம் தேதி (31.01.205) தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி (01.02.2025) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். 63 ஆண்டுக்கால பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிதியமைச்சர் சீதாராமன்  இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதிக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் சட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது. எனவே பழைய வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த புதிய வருமான வரிச் சட்டம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் சிக்கல் இன்றி இயற்றப்பட்டுள்ளது.  படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள நீளமான சொற்களுக்குப் பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.

முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு போன்ற சொற்களுக்குப் பதில் வரி ஆண்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதன் மூலம் வருமான வரி சட்டத்தை எளிதாகப் புரிந்துகொள்ளுதல், சிக்கலின்றி வருமான வரி தாக்கலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மக்களவை நடவடிக்கைகள் மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. 

சார்ந்த செய்திகள்