![Seeman | Periyar | Erode East By Election | adv maniammai](http://image.nakkheeran.in/cdn/farfuture/K2qCTGPI3coV2NtZHJdXNsSExj_Bb6coE_fLPC7X2rg/1739340204/sites/default/files/inline-images/Mani.jpg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். இது குறித்து திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்கறிஞர் மணியம்மை அவர்கள் நம்மிடையே தன்னுடைய கருத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வியை அடைந்த நாம் தமிழர் கட்சி, தேர்தலுக்கு முன்பாக ஒரு மாதிரியும், தேர்தலுக்கு பிறகு ஒரு மாதிரியும் பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன் நாம் தமிழர் பிள்ளைகள் எங்களை வெற்றி அடைய வைப்பார்கள் என்றார். படு தோல்வி அடைந்த பிறகு இது வெற்றிகரமான தோல்வி என்று பேசுகிறார்.
அது வேற வாய், இது வேற வாய் என்று வடிவேல் போல பேசுகிறார் சீமான். பெரியாரை விமர்சித்ததால் மரண அடியைக் கொடுத்து விடுவார்கள் மக்கள் என்று அவருக்கு ஈரோடு இடைத்தேர்தல் உணர்த்தியிருக்கும். பெரியாரை விமர்சித்து தமிழ்நாட்டில் ஓட்டு வாங்கி விட முடியும் என்றால் அதற்கு சாத்தியமே இல்லை. ஏனெனில் பெரியார் என்பது பெரிய தத்துவம், தமிழ்நாட்டின் தலைநிமிர்வு. அந்த அளவிற்கு பெரியார் உழைப்பு அலாதியானது.
பெரியார் எதிர்ப்பு என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ் அருவடி வேலையை செய்தால் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வியை தழுவுவார்கள் என்பதை நாம்தமிழர் கட்சியினர் ஈரோடு இடைத்தேர்தலில் உணர்ந்திருப்பார்கள். இன்னும் எவ்வளவோ பேசுவேன் என்கிறார். பேசட்டும், அவர் பேச்சுக்குப் பின்னே ஆர்.எஸ்.எஸ் தான் இருக்கிறார்கள் என்பதையும் அறிவோம்.
தந்தை பெரியாரை எதிர்க்கிற தம்பிகள் தனக்கு வேண்டாம் என்பவர். இப்போது யாரை ஆதரிப்பார் என்றால் ஆடிட்டர் குருமூர்த்தியையும், ஹெச்.ராஜாவையும் தான் ஆதரிக்கிறார். அவர்கள் சொன்னதைத் தான் இவர் பேசுகிறார். அனைவரையும் சமமாக பார்ப்பான், அதுதான் பாப்பான் என்கிறார். இது மிகவும் பிற்போக்குத்தனமான வாதமாக இருக்கிறது.
பிரபாகரனே பெரியாரை ஆதரித்தால் நான் எதிர்ப்பேன் என்கிறவர் வரும் காலங்களில் பிரபாகரனையே எதிர்க்க மாட்டார் என்பது என்ன நிச்சயமாக இருக்கும்? என்று நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியாரை எதிர்ப்பதன் மூலமாக சங்க்பரிவார் கும்பல்கள் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்கிற திட்டத்திற்காக சீமானை இறக்கியிருக்கிறார்கள். அது அவர்களின் மறைமுக திட்டமாக உள்ளது. அது ஒரு போதும் தமிழகத்தில் நடக்காது.