தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்ததெல்லாம் இலக்கிய புனைவுகள் அல்ல. அரசியலுக்காக சொன்னவை அல்ல. எல்லாம் வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. தமிழனின் பெருமையை தமிழினத்தின் தொன்மையை உலகம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.
“5,300 ஆண்டு கட்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன் உலக மானுட இனத்துக்கு தமிழ் நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாட்டின் வயது 5300 ஆண்டுகட்கு முற்பட்டது” என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்திய மறுகணம் தமிழகத்தில் ஏக வரவேற்பு கிடைத்தது.
5300 ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த இந்த அதிசயத்தையும் ஆச்சர்யத்தையும் உலக தொல்லியல் வல்லுனர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை வெளிப்படுத்திய பெருமை தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி பொருநையாற்றில் அமைந்துள்ள சிவகளை என்பது கூடுதல் சிறப்பு. அகழாய்வின் இந்த அதிசயம் குறித்து கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தொல்லியல் ஆராய்ச்சியின் ஆர்வலரும் எழுத்தாளருமாகச் செயல்பாட்டாளருமாகச் செயல்பட்டு வருகிற அகழாய்வு ஏரியாவின் அருகிலுள்ள முத்தாலங்குறிச்சி, காமராசு, நிறுத்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியைத் தொடரவும், சிவகளையில் நடத்தப்பட வேண்டிய தொல்லியல் துறையின் அகழாய்வுப் பணிக்காகவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரை சென்றுமுந்தைய ஆட்சியரளர்களை செயல்பட வைத்தவர். அது தற்போதைய ஆட்சியிலும் தொய்வின்றி தொடர்வதால் சிவகளையில் புதைந்து கிடந்த அகழாய்வு அதிசயம் தற்போது வெளியேறியிருக்கிறது.
நாம் அவரிடம் பேசிய போது, “சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறையின் ஆய்வாளரான அலக்ஸாண்டர் ரியா என்பவர் தமிழகத்தில் தொல்லியல் அகழாய்வுக்கு எங்கெல்லாம் வாய்ப்பான பகுதிகள் என்ற ஆய்வை மேற்கொண்டார். வடபகுதியிலிருந்து தென்பகுதியான தாமிரபரணிக் கரையின் ஆதிச்சநல்லூர் வந்து அங்கு ஆய்வு செய்தவர், அது அகழாய்விற்கு உட்பட்ட பகுதி என்று வரைபடத்தோடு குறிப்பிட்டார். ஆனால், தாமிரபரணிப் பகுதியிலுள்ள சிவகளையைப் பற்றி அவர் குறிப்பிடவேயில்லை. காரணம், ஒரு வேளை ஆதிச்சநல்லூரும், சிவகளையும் பூகோளப்படி ஒரே நேர் கோட்டிலிருக்கலாம் என்றும் கூட அப்போது கருதப்பட்டது. இப்படி அவர் தமிழகத்தில் 37 பகுதிகள் அகழாய்வு செய்யப்பட வேண்டிய பகுதி என்று குறிப்பு தந்து விட்டுச் சென்றுள்ளாரம்.
கொற்கை துறைமுகமான தாமிரபரணியின் அந்தப் பகுதியான சிவகளை, தொல்லியல் ஆய்விற்குட்பட்ட பகுதி என்று பிறகு தெரிய வந்தது. ஏனெனில் சில ஆய்வாளர்கள் சிவகளை தொல்லியல் களம் என்று பல்வேறு குறிப்பிகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதை அப்போது எவரும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் அருகிலுள்ள ஸ்ரீவை நகரின் மேல் நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியரான மாணிக்கம் சிவகளையை ஒட்டியுள்ள கொற்கை பரப்பில் தொல்லியல் பற்றிய குறிப்பேடுகள் காணப்பட்டதால் அந்தப் பகுதியில் அவரது ஆய்வில் அது சம்பந்தமான பல்வேறு தொன்மையான பொருட்களை சேமித்திருக்கிறார். பால் சேகரிக்கிற மண் கிண்ணங்கள் உள்ளிட்டவைகளும் கிடைத்திருக்கின்றன. அதனைப் பற்றிய விபரங்களை அவ்வப்போது அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.
அந்தச் சமயத்தில் காமராசு ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிக்கான வழக்கு முறையாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், சிவகளைப் பகுதிக்குத் தனது வழக்கறிஞர் அழகுமணியுடன் சென்றிருக்கிறார். உடன் சென்ற ஆசிரியர் மாணிக்கமும் தான் சேகரித்த தொல்பொருட்களைக் காட்டியவர், பின் அவர்களுடன் பரம்புப் பகுதிக்குச் சென்ற சமயம் அவர்களது ஆய்வில் மீனாட்சிபட்டியிலிருந்து சிவகளை வரை ஆங்காங்கே சில தொல்லியல் பொருட்கள் தென்பட்டுள்ளன. மேலும் ஆசிரியருக்கு இந்தக் கள ஆய்வில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வாளர் பிரசன்னா உதவியிருக்கிறார். அவர்களும் இதன் பொருட்டு பலவிதமான ஏற்பாடுகளைச் செய்ததில் எந்தவிதமான முன்னேற்றமில்லையாம்.
இதையடுத்தே காமராசு சிவகளையை தொல்லியல் ஆய்விற்குட்படுத்தவேண்டி 2018ன் போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய, 2019ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது சிவகளை களத்தை தொல்லியல் ஆய்விற்குட்படுத்த கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. அதையடுத்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறையின் தென்மண்டல ஆணையாளர் உதயச்சந்திரன் தலைமையில் இயக்குனர் சிவானந்தன் தங்கதுரை, லோகநாதன் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். மூன்று கட்டமாகக் கள ஆய்வினை மேற் கொண்டவர்களுக்கு முதற்கட்ட ஆய்வின் போது பழங்காலப் பொருட்கள் பலது கிடைத்திருக்கின்றன.
அதையடுத்து வல்லுனர்களின் மூன்று கட்ட ஆய்வின் போது கிடைத்துள்ள மண் கிண்ணம், தாழியுடன் உள்ளே இருந்த நெல்லின் உமிகள், (முழு ஆரோக்யமாக பல ஆண்டுகள் வாழ்ந்த பண்டைக்காலத்தின் மரணமான மனிதர்களை தாழி எனப்படுகிற முதுமக்கள் தாழியின் உள்ளே வைத்து அவர்களின் பாரம்பரிய விவசாயப் பொருளான நெல்மணிகளையும் சேர்த்து வைத்து புதைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. காலப்போக்கில் அந்த நெல்மணிகள் உமியாக உதிர்ந்திருக்கிறது) இரும்பு துகள்கள், கழிவுகள், அதன் வழியே செய்யப்பட்ட இரும்பு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்டெடுக்கப்பட்ட தொல்லியில் பொருட்களை ஆணையர் உதயச்சந்திரன் தலைமையிலான குழுவினர் உலகின் நிபுணத்துவும் வாய்ந்த தொல்லியல் துறைகளான அமெரிக்காவின் ஃபீட்டா ஆய்வகம், லக்னோவிலுள்ள ஆய்வகம் உள்பட உலக நாடுகளின் ஐந்து முன்னணி நிறுவனங்களுக்குப் பகுப்பாய்வு மற்றும் பயன்பாட்டின் வயது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
பல கட்ட ஆய்விற்குப் பின்பு அனைத்து தொல்லியல் ஆய்வகங்களும், இவையனைத்தும் சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிலிருந்தவகைள். குறிப்பாக இரும்பு துகள்கள், ஆயுதங்கள், உமியுடன் கூடிய தாழி வயது 5300 ஆண்டுகள். அப்போதைய காலங்களில் புழக்கத்திலிருந்திருக்கின்றன என்று ஒரே மாதிரியான அறிக்கையை அனுப்பியது கண்டு தொல்லியல் வல்லுனர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஏனெனில் இது போன்ற உலக தொல்லியல் ஆய்வகங்களால் சிவகளையில் இரும்பு புழக்கம் மற்றும் சிவகளையின் வயது 5300 ஆண்டுகள் என்பதும் ஆதிச்சநல்லூரின் வயது 4800 ஆண்டுகள் என்பதும், மூன்றாவதாக வெம்பக் கோட்டையின் வயது 4400 ஆண்டுகள் என்பதும், இதில் கீழடி 2600 வயதைத் தாண்டவில்லை என்பதோடு சிவகளையே மூத்தகுடியாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, என புருவங்களை உயர வைத்த ஆர்வலர் காமராசு,
தமிழர்களின் நாகரீகம் மட்டுமல்ல, உலக நாகரீக வரலாற்றை தாமிரபரணியின் இந்தப் பொருநையாற்றிலிருந்து தான் எழுதப்பட வேண்டும். பொருநையாறு தான் தொடக்கப்புள்ளி. ஏனெனில் முதன்முதலில் இரும்பை உருக்கி பலவகைப்படுத்தியதும் முதன்முதலாக இரும்பை உருக்கக் கூடிய அரிய விஷயத்தைக் கண்டு பிடித்ததும் இந்தப் பொருநையாற்றின் சிவகளைத் தமிழர்கள் தான். காரணம் அந்தப் பகுதிகளின் நிலப்பரப்புகள் கரடு முரடான விரிந்த பகுதிகள். விவசாயப் பயன்பாட்டிற்காக சாதாரண ஏர்கலப்பை சாத்தியப்படாது என்பதால்தான் இரும்பினாலான ஏற்கலப்பையைப் பயன்படுத்தி நெற்பயிர் உள்ளிட்டவைகளை 5300 ஆண்டுகட்கு முன்பே விவசாயம் செய்ததோடு ஈட்டி மற்றும் கத்திகள் தயார் செய்திருக்கிறார்கள். பொருநைத் தமிழர்கள். இன்றைக்குப் பல்வேறு நவீனத் தொழிற்சாலைகள் உருவாகுவதற்கு அடிப்படையே இந்த இரும்பு தான். அந்த இரும்புக்காலம் 5300 ஆண்டுகட்கு முன்பே இங்கே தொடங்கிவிட்டது. ஆனால் தங்கம், வெள்ளி போன்றவைகள் காணப்படவில்லை.
அருகிலுள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் அமைத்திருப்பதைப் போன்றே மூத்தகுடியான சிவகளையிலும் அதுபோன்று அமைக்கப்பட வேண்டும் என்றார். சிந்து சமவெளி நாகரீகம் என்ற வழக்காடலைத் தகர்த்திருக்கிறது பொருநையாற்றின் சிவகளை வெளி, நாகரீகம்.