Skip to main content

பேரூராட்சி இணைப்பு விவகாரம்; கொதிநிலையில் குற்றாலம்!

Published on 19/01/2025 | Edited on 19/01/2025
Municipality merger issue boiling point Courtallam

குளிர்ச்சியான தென்காசி மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலம் கொதி நிலையிலிருக்கிறது. காரணம் பேரூராட்சி இணைப்பு விவாகரம். தமிழ்நாடு அரசு அண்மையில் மாநிலத்தின் சில ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை அருகிலுள்ள நகராட்சி, மற்றும் மாநகராட்சியோடு இணைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி தென்காசியின் மாவட்டத் தலைநகரான தென்காசி நகராட்சியோடு மேலகரம், மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பேரூராட்சிகளை இணைப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதோடு இந்த தகவல் வெளியான உடனேயே குற்றாலம் பேரூராட்சிக் கவுன்சில் தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் பேரூாட்சியின் தலைவர் கணேஷ் தாமோதரன் ஜனவரி 3 அன்று கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அந்த அவசரக் கூட்டத்தில் பேரூராட்சியின் எட்டுக் கவுன்சிலர்களில் ஆறு கவுன்சிலர்கள் மெஜாரிட்டியான வகையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் கணேஷ் தாமோதரன், துணைத் தலைவர் தங்கபாண்டியன், செயல் அலுவலர் சுஷாமா உள்ளிட்டோருடன் ஜோகிலா, கிருஷ்ணராஜா, மாரியம்மாள், ஜெயா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். கூட்டத்தில் குற்றாலம் பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். மெயின் அருவி, சிற்றருவி ஐந்தருவி, பழையகுற்றாலம், செண்பகாதேவி அருவி என்று மேற்குத் தொடர்ச்சி மலையின், எட்டுக்கும் மேற்பட்ட அருவிகளை உள்ளிடக்கிய குற்றாலம் ஆரம்பகாலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது டவுண்ஷிப் என்ற சிறப்பு அந்தஸ்திலிருந்தது. பின்னர் 1955ல் குற்றாலம் ஊராட்சியாகி, 1997இல் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்திற்கு உயர்ந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.

இந்திய தேசம் மட்டுமல்ல உலக நாடுகள் வரை பரவிய குற்றாலம் அங்கிருந்தெல்லாம் சுற்றுலா பயணிகள் வந்து போகிற அளவிற்கு ஈர்த்துள்ளது. நெற்றிப் பொட்டின் திலகம் போன்று தென்காசி, குற்றாலத்தைக் கொண்டே அடையாளப்படுத்தப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. காலப் போக்கில் சுற்றுலாத் தலங்களின் வரிசையில் இடம் பெற்று குறிப்பிட்ட கோடை வாஸஸ்தலமானது குற்றாலம். முறைப்படியான உள்ளாட்சித் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கீழ் நிர்வாகம் செயல்படுவதைப் போன்று 8 வார்டுகளைக் கொண்ட குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் அ.தி.மு.க.வின் கணேஷ் தாமோதரன் தவிர தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இங்கே சம நிலையிலிருக்கிறார்கள்.

3600க்கும் மேற்பட்ட அளவிலிருக்கிற குற்றால நகரின் மக்கட் தொகையின் வாக்காளர்களின் எண்ணிக்கை 2800ஐயும் தாண்டுகிறது. மற்ற நகர கிராமங்களைப் போன்றில்லாமல் குற்றால நகரின் மக்களின் வாழ்விடங்கள் ஓரிரு பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகள் மலைப்பாங்கானது என்பதால் அங்கொன்றும் இங்கொன்று குடியிருப்புகளுமாய் விரிந்து காணப்படுகிறது. மக்களின் அடிப்படை மேம்பாட்டைப் பொறுத்து எட்டு வார்டுகளாக  வரையறுக்கப்பட்டு, அரசின் போரூராட்சியின் நலத்திட்டங்கள் சென்றடைகிற வகையில், அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் 8 கவுன்சிலர்கள் மக்கள் பிரதிநிதியாக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள். நிலையான தொழில் என்றில்லாமல், அருவிகளின் சீசனுக்காக வருகிற சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்தே இந்நகரவாசிகளின் ஜீவாதாரங்கள் நகர்கின்றன. சீசன் முடிகிறபோது குறிப்பிட்ட சில மாதங்கள் வருமானத்திற்கு கேள்வியாகின்றன என்கிறார்கள் குற்றாலவாசிகள்.

Municipality merger issue boiling point Courtallam

சீசன் காலங்களில் வருகின்ற குத்தகை வருமானத்தையே அடிப்படையாக வைத்து குற்றால நகரம், மக்களின் சுகாதாரக் கட்டமைப்புகள் போன்ற பணிகளை இன்னல்களுக்கிடையே மேற்கொண்டிருக்கிற சூழலில், இணைப்பு என்ற வகையில் உள்ளதும் கேள்வியாகிவிடக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. அதனால்தான் இணைப்பு கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சூழல் என்பது கவுன்சிலர்களின் மனநிலையாக இருக்க. தீரமானம் நிறைவேறிய பின்பு பேசிய பேரூராட்சியின் தலைவரான கணேஷ் தாமோதரன், “ஒட்டு மொத்த அருவிகளைக் கொண்ட குற்றாலம் தான் தென்காசியின் அடையாளமே. தென்காசி நகராட்சியோடு இணைப்பு என்றானால் குற்றாலத்தின் தனித் தன்மை, உலகமறிந்த சுற்றுலாத்தலம் இழக்கப்பட்டு குற்றாலம் என்கிற அடையாளமே மங்கிவிடும். நிதி பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டால் குற்றாலத்திற்கான பணிகள் செய்ய இயலாமல் போகும். 8 வார்டுகளைக் கொண்ட குற்றாலம் ஒரு வார்டாக வரையறுக்கப்பட்டு, மக்களின் பிரதிநிதித்துவமான கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் குறைவதால் மக்கள் பணி சீர்குலைந்துவிடும்.

அன்றாடம் வந்து செல்கிற லட்சம் தாண்டிய சுற்றுலா பயணிகள், நகரவாசிகளின் சுகாதாரம் குடிநீர் விநியோகப் பணிகள் கண்டிப்பாக நிதியின்றி சீர்கெட்டுப் போகும். சீசன் காலங்களில் கட்டமைப்புகள் சீர்குலைந்து குற்றாலம் அவலமாகிவிடும். அதனால் தான் தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி 6 கி.மீ. தொலைவிலுள்ள தென்காசி நகராட்சியுடன் இணைக்கப்படக் கூடாது என்று இந்த மன்றம் எதிர்க்கிறது” என்றார் அழுத்தமாக.

அருவிகளின் நகர மேம்பாடுகள், செயல்பாடுகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் கவுன்சிலரும் வழக்கறிஞருமான குமார் பாண்டியன், “அருவிகளுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கார் பார்க்கிங், குத்தகை, ஆயில் மசாஜ், லாட்ஜ் மற்றும் சொத்து வரி என்று வருடத்திற்கு மூன்றரை கோடிகள் வருகிற இனங்கள, மற்றும் நகரியத்திற்கென்று வழங்கப்படுகிற சுற்றுலா தல மைய சிறப்பு நிதி என்று வரப்பெறுகிற மொத்த நிதியைக் கொண்டு தான் நகர மக்களின் அடிப்படை வசதிகள், சுகாதாரக் கட்டமைப்புகளை மேற்கொள்வதோடு, ப்ளோட்டிங் பாப்புலேஷன் எனப்படுகிற அன்றாடம் வந்து செல்கிற லட்சம் அளவிலான அருவிச் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளையும் எவ்விதக் குறையுமில்லாமல் செம்மையாகச் செய்து வருகிறோம். இதற்காகவே 67 துப்புறவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பார்த்து பார்த்துச் செய்து குற்றாலம் க்ளீன் சிட்டியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குற்றாலம், தென்காசி நகராட்சியோடு இணைப்பு என்று வந்தால் வருகின்ற நிதிகளனைத்தும் அங்கே சென்று விடுகிற போது தனது பராமரிப்பின் நிதிக்காக குற்றாலம் ஏங்கித் தவிக்க வேண்டியதாகிவிடும். நகர மக்களின் கட்டமைப்புகள் சீர்கெட்டு சுற்றுலா பயணிகளின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். குற்றாலத்தின் தற்சார்பு, சுயசார்புகள் அறவே அற்றுப் போய்விடும். தற்போதைய 8 வார்டுகள் சுருக்கப்பட்டு ஒரு வார்டாகிறபோது ஒரு கவுன்சிலரால் 8 கி.மீ. சுற்றளவு பரந்து விரிந்து கிடக்கிற ஏரியாவின் மக்கள் நலன்களைப் பராமரிக்க இயலுமா. ஆகுற காரியமா. இங்குள்ள ஒரு சாமான்ய மனிதரால் தனது தேவையின் பொருட்டு 6 கி.மீ. தாண்டியிருக்கிற தென்காசி நகராட்சிக்கு சென்று வரமுடியமா? சரி. பரப்பளவை அதிகரிக்க நினைக்கிற நீங்கள் தென்காசியின் ஒரு கி.மீ.க்கும் குறைவான தொலைவைக் கொண்ட அருகிலுள்ள ஹவுசிங் போர்ட் காலனி மற்றும் குத்துக்கல்வலசை ஊராட்சிகளை இணைக்காமல் 6 கி.மீ. தள்ளியுள்ள குற்றாலத்தை இணைக்க முற்படுவது ஏன்?. இணைப்பால் உங்களுக்கு என்ன லாபம். அதை முதலில் வெளிப்படுத்துங்கள்” என்றார் புருவங்களை உயர்த்திய படி.

Municipality merger issue boiling point Courtallam

குற்றால நகர வியாபாரிகளின் சங்க தலைவரான அம்பலவாணன், “அருவிக்கரை மற்றும் பிற பகுதிகளின் சிறுகடைகள் என்று 400க்கும் மேற்பட்ட எங்களின் கடைகளின் வியாபாரமே வருகின்ற சீசன் சுற்றுலாப் பயணிகளை நம்பித்தானிருக்கு. மூன்று மாத சீசன் மற்றும் 2 மாதம் ஐயப்ப பக்தர்களின் வருகை என்று வருடத்தில் 5 மாதம் மட்டுமே எங்களுக்கான வியாபார வருமான ஆதாரம். மிஞ்சிய ஏழு மாதங்களில் வழிப்போக்கு வியாபாரத்தில் எதுவுமே கிடைக்காத எங்களின் நிலையறிந்து தான் குற்றாலம் பேரூராட்சி கடைகளுக்கான வரியை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த வரியையே செலுத்த நாங்கள் திணறுகிறபோது குற்றாலத்தை தென்காசியோடு இணைத்தால் கடைகளின் வரி இரண்டு மடங்காகிவிடும். அப்ப எங்க நிலைமை என்னாகுமோ யோசிச்சுப் பாருங்க. அரசு கருத்துக் கேக்க வரும்போது இணைப்பு கூடாதுன்னு நாங்க கடும் கண்டனம் தெரிவிப்போம்” என்றார் குரலை உயர்த்தி.

Municipality merger issue boiling point Courtallam

குற்றாலவாசியான மணிகண்டன் மேளம் வாசிக்கும் தொழிலிருப்பவர். அவரோ, “வாரத்தில ஒரு நாள், மேள வாசிப்பு ஆர்டர் கெடைச்சா தொளாயிரம் ரூவாதான் எனக்கு கூலியே கிடைக்கும். மாசம் மூணுயில்ல, நாலு ஆஃபர் கிடைக்கிறதே பெரும்பாடு. சொற்ப வருமானத்த வைச்சு காலத்த ஓட்ற என்னால வீட்டு வரியே கட்ட முடியல. இதுல நகராட்சியாயிட்டா சொத்துவரி, தண்ணி வரிய கூட்டிறுவாக. அப்ப எங்களப் போல உள்ளவுக நெலம என்னாகும்யா யோசிச்சுப் பாருங்கய்யா” என்றார் வேதனையோடு. என்னோட மூணு மகன்களும் தல்யாணமாகி அவுகவுக பாட்டப் பாக்கப் போயிட்டாக. வயசாளிங்க நாங்க. எனக்கு பார்வை சரியா பத்தாது. எங்க வூட்டுக்காரரு பென்சன வைச்சுத்தான் எங்க பொழப்பு ஓடுது. பேரூராட்சியோட ஆயிரத்து இருநூறு ரூவா தீர்வையையே கட்ட முடியாமத் தெணறுறோமே. நகராட்சியாயிறும்னா, அந்தவரி, யிந்தவரின்னு வருவாகளே. அதக் கட்ட எங்க கிட்ட எந்த இனம் யிருக்கு. இதுக்கு வழிய சொல்லுங்க என்றார் வள்ளியம்மாள் பரிதாபமாய். மக்களுக்காகத்தான் அரசாங்கம். அரசாங்கத்திற்காக அல்ல மக்கள். கொதி நிலையிலும் புதிரான கேள்விகள் கிளம்புகின்றன.

சார்ந்த செய்திகள்