![AIADMK former minister Paranjothi spoke about DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/xIZ6FQoGmFESjtyqhCW0gGFCwl29e7evj8ISUQP9TXo/1697612405/sites/default/files/inline-images/885_49.jpg)
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சா. அய்யம்பாளையம் எம்ஜிஆர் திடலில், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆதாளி தலைமையில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, தலைமை கழக பேச்சாளர்கள் வடுகபட்டி பே.சுந்தரபாண்டியன், கோதை தங்கவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, “திமுக கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்ததை தட்டி கேட்டதற்காக எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரால் அதிமுக உருவானது. எம்ஜிஆர் கட்சி தொடங்கியதும், எம்ஜிஆரின் படங்கள் வேண்டுமானால் 100 நாட்கள் ஓடும், ஆனால் இந்த கட்சி 100 நாளை தாண்டாது என மறைந்த திமுக தலைவர் கலைஞர் விமர்சித்தார். ஆனால் அதிமுக நூறு நாட்கள் அல்ல 52 வது ஆண்டு துவக்க விழாவில் காலடி வைத்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளன.
எடப்பாடியார் அறிவித்த திட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டனர். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, திமுகவிற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்” என பேசினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி மாவட்ட செயலாளர் கண்ணதாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.