Skip to main content

'ரூ.18,500 பதில் ரூ.1,85,000 கொடுத்த வங்கி காசாளர்'- நேர்மையுடன் திரும்ப கொடுத்த கூலித் தொழிலாளி

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

 Bank cashier who gave Rs. 18,500 instead of Rs. 1,85,000 - wage laborer who honestly returned it

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55) தினசரி கிடைக்கும் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளி. இவர், இன்று வியாழக்கிழமை தனது குடும்பத் தேவைக்காக கீரமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று 4 கிராம் தங்க நகையை ரூ.18,500 க்கு அடகு வைத்துள்ளார். அதற்கான படிவம் நகை மதிப்பீட்டாளரிடம் அலுவலர்கள் சரிபார்த்த பிறகு பணம் வழங்குவதற்காக காசாளரிடம் வந்துள்ளது.

காசாளர் செல்வராஜ் பெயரை அழைத்து ரூபாய் கட்டுகளை கொடுத்துள்ளார். காசாளரிடம் வாங்கிய பணக்கட்டுகளை வாங்கிய கூலித் தொழிலாளி செல்வராஜ் தான் கொண்டு போயிருந்த நரம்பு பைக்குள் வைத்தவர் திடீரென பணக்கட்டுகளை வெளியே எடுத்து நகை அடகு வைத்த தொகை ரூ.18,500 ஆனால் இதில் ரொம்ப அதிகமாக உள்ளதே என்று கேட்டுக்கொண்டே பணக்கட்டுகளை மீண்டும் காசாளரிடம் கொடுத்துள்ளார். அதில் தொகை ரூ.1,85,000 இருந்துள்ளது. பணத்தை கொடுத்த செல்வராஜ், 'எனக்கு இவ்வளவு பணம் வேண்டாம் நான் நகை அடகு வைத்த ரூ.18,500 மட்டும் கொடுங்கள் போதும்' என்று சொல்லி தன்னுடைய பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்.

வங்கி காசாளர் கவனக்குறைவாக கொடுத்த ரூ.1,85,000 பணத்தை எடுத்துச் செல்லாமல் நாணயமாக திருப்பிக் கொடுத்ததைப் பார்த்த காசாளர் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் கூலித் தொழிலாளி செல்வராஜை பாராட்டினர். இது குறித்து செல்வராஜ் கூறும் போது, ''தினமும் நமது உழைப்புக்கு கூலி கிடைத்தால் போது. அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படக் கூடாது. எனக்கு தரவேண்டிய தொகை தான் தருகிறார்கள் என்று பணத்தை வாங்கி பையில் வைக்கும்போது தான் இவ்வளவு பணம் இருக்கேங்கிற நினைப்பு வந்து திருப்பிக் கொடுத்தேன். நமக்கு நிறைய பணம் கிடைக்கிறதேன்னு காசாளர் கொடுத்ததை கொண்டு போய் இருந்தால் அவங்க அந்த பணத்தை வங்கியில் வைக்க எவ்வளவு சிரமப்படுவாங்க. மொத்த வங்கி ஊழியர்களுக்கும் எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும். அதாவது எனக்கு எவ்வளவு கெட்ட பெயர் வரும். நமக்கு எதுக்கு அடுத்தவங்க பணம். அதனால தான் மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்துட்டு என் பணத்தை மட்டும் வாங்கிட்டு வந்தேன்'' என்றார் பெருமையாக.

சார்ந்த செய்திகள்