![When will the Poontamalli Porur Metro Rail service be started CM information](http://image.nakkheeran.in/cdn/farfuture/96oGeY6RRxCfAqZX13Yzpy_VTMFx0yG9xtaccasyvC4/1739442041/sites/default/files/inline-images/metro-mks-ins-art.jpg)
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.2 கிமீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.02.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கலைஞர் முதலமைச்சராகவும், நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்போதைய அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட மத்த்திய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும். நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.