கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இக்கல்லூரியில் பயில்வதற்காக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட தொலைதூர ஊர்களில் இருந்து வரக்கூடிய மாணவிகள் அரசுக் கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியர் விடுதிக் காப்பாளராக உள்ள, பாத்திமா என்பவர் மாணவிகளுக்கு வழங்கக்கூடிய மூன்று வேளை உணவுகளும் தரமற்ற முறையில் வழங்குவதாகவும், உப்பு, காரம், புளி உள்ளிட்டவைகளை கூடுதலாகப் பயன்படுத்தி, மாணவிகள் சாப்பிட முடியாத அளவில் செய்வதாகவும், மாணவிகள் தட்டிக்கேட்டால் விடுதியை விட்டு வெளியே செல்லுங்கள் என்று மிரட்டுவதாகவும், குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக இதே நிலை நீடித்து வந்தததால், ஆத்திரமடைந்த 20- க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று (08/03/2022) காலை 08.00 மணியில் இருந்து அரசு விடுதி முன்பு தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு மாணவியர் விடுதி அமைந்துள்ள பகுதி முற்றிலும் காடுகள் சூழ்ந்த பகுதி என்பதால், இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், மாணவிகள் தங்கியுள்ள அறைகளை நோக்கி கற்களைக் கொண்டு வீசுவதாகவும், அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
தரமற்ற உணவு, சுகாதாரமற்ற கழிப்பிடம், விடுதி காப்பாளர் மிரட்டல், பாதுகாப்பின்மை என அனைத்து வகைகளிலும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,100- க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்த விடுதியில், தற்போது 26 மாணவிகள் மட்டுமே தங்கி உள்ளனர் என்று மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காலை உணவு கூட சாப்பிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர், வெயிலின் தாக்கத்தாலும், பசி மயக்கத்தாலும் மயக்கமடைந்து வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மாணவிகளின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.