தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதல்வராக பொறுப்பேற்றதும் 100 நாட்களில் இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதன்படி முதல்வராக பதவி ஏற்றவுடன் இந்த மனுக்கள் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து தனித்துறை ஒன்றை உருவாக்கினார். இந்தத் துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமித்தார். இந்த துறை மூலம் மனுக்களுக்கு தீர்வு காண துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் உள்ள சிறப்பு குறைதீர் மையம் மூலம் மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குறைகள் தீர்வு காணப்படுகிறது. இதற்காக மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் இதுவரை 170 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிலும் குடும்ப பிரச்சனை தொடர்பாக 17 மனுக்களும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக 49 மனுக்களும், சொத்து தகராறு 38, சட்டவிரோத செயல் 9 மனுக்களும், காவல் நிலைய செயல் 14 மனுக்களும், இதர காரணங்கள் 49, என மொத்தம் 176 மத்திய படலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாநில அளவில் உள்ள சிறப்பு குறை தீர் மையம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மொத்தம் 395 அதில் தீர்வு காணப்பட்டவை 176, நிலுவையில் உள்ள 22, நிராகரிப்பு 52, பிறர் துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது 145.