வழக்கறிஞர் தொழிலில் ஆரம்பத்தில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அதிருப்தி அடைய வேண்டாம் என இளம் வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய அரசியல் சாசனம் 1949- ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950- ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம், அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் சாசன தினம் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 865 சட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல, அரசியல் சாசன தின உறுதிமொழியை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி படிக்க சக நீதிபதிகளும், பார் கவுன்சில் நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசுகையில், ‘‘இந்த மாநிலம் அறிவுசார் மக்களின் முனையமாக உள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் அரசியல் சாசனம் அனைத்து சட்டங்களுக்கும் தாயாக உள்ளது. அரசியல்சாசனம் பகவத் கீதையைப் போன்றது. அது உங்களுக்கு பல விசயங்களைக் கற்றுத்தரும். மூத்தோர்களின் வழியைப் பின்பற்றுங்கள். உலகிலேயே மிகப்பெரிய அரசியல் சாசனம் நம்முடையதுதான். நல்ல விசயங்களைச் செய்வதற்கு நல்ல பாதையைத் தேர்ந்தெடுங்கள். வழக்கறிஞர் தொழில் ஆரம்பத்தில் போராட்டங்கள் நிறைந்ததாகவும், அதிருப்தி நிறைந்ததாகவும்தான் இருக்கும். நல்ல குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த சட்ட அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த முறையில் பணியாற்றினால் உண்மையான திருப்தி கிடைப்பதுடன் புத்தருக்கு கிடைத்தது போன்ற ஞானத்தையும் கூடுதலாகப் பெறமுடியும். சுயநலத்தை விட்டொழியுங்கள். ஒட்டுமொத்த அமைப்பும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அந்த நம்பிக்கையை நீங்கள் பெற்றெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் வெற்றி இல்லாவிட்டாலும் அதிருப்தி அடையாதீர்கள்’ என்றார்.
நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில்,"சமீபகாலங்களில் தமிழகத்தில் உரிமைகள் கொண்டாடப்பட்டு கடமைகள் மறக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சமூகத்தில் எதிர்வினை உருவாகும்போது வழக்கறிஞர்களின் பங்கு அங்கு முக்கியமாகிறது. உங்களது சட்ட அறிவு என்பது பொதுநலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல. சாதி, மத சக்திகளுக்கு இறையாகிவிடக் கூடாது. போக்குவரத்து விதிகளை மதியுங்கள். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் தங்களை தற்காத்துக்கொள்ளவே சட்டப் பட்டம் பெறுகின்றனர். அதுபோன்ற சூழல் இனி உருவாகக்கூடாது", என்றார்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசுகையில், மக்கள் வழக்கறிஞர்கள் என்றாலே அதிருப்தியில் உள்ளனர். வழக்குகளை எப்படி வாதிடலாம் எனக்கூறும் அளவுக்கு சென்று விட்டது. திறமையான வழக்கறிஞர்களாக நீங்கள் செயல்பட வேண்டும், என்றார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், “சட்டத்தின் ஆட்சி முடிந்து விட்டால் கலகம் உருவாகிவிடும். நல்ல குணாதிசயங்களை வளர்த்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.” என்றார்.