வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் - பத்மா தம்பதியினர் கூலி தொழிலாளியான இவர்களுக்கு சௌமியா, சஞ்சய், சங்கவி என்ற 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாவது மகளான சங்கவி அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டி கடைக்கு சைக்கிளில் சென்று வீடு திரும்பிய போது, அதே பகுதியை சேர்ந்த கென்னடி மற்றும் அவரது மகன் பிரதாப் ஆகிய இருவரும் பாலாற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி ஊருக்குள் வேகமாக ஒட்டி வந்துள்ளனர்.
அப்போது எதிரே சைக்கிளில் வந்த 11 வயது சிறுமி சங்கவி மீது மாட்டுவண்டி மோதியது. தடுமாறி கிழே விழுந்த சிறுமி மீது வண்டியின் சக்கரம் ஏறி இறங்க சம்பவ இடத்திலேயே தாய் கண்முன்னே குழந்தை துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த கென்னடி மற்றும் அவரது மகன் பிரதாப் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார் மணல் கடத்தப்பட்ட மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
உடலை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பிவைத்தனர். பாலாற்றில் இரவும், பகலும் மணல் கடத்துவது என்பது முன்பை விட அதிகரித்துள்ளது. அதனை காவல்துறை கண்டுக்கொள்வதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
இறந்த சங்கவி குடும்பம் வன்னியர் என்பதால் இதுப்பற்றி பாமக தலைமைக்கு தகவல் கூறியுள்ளனர். மணல் மாபியாக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாஸ் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதால் இந்த விவகாரத்தையும் கையில் எடுப்பார் என நம்புகின்றனர். இன்னும் உடல் மருத்துவமனையில் இருந்து வாங்கவில்லை. வண்டி ஓட்டியவர்கள் அருந்ததிய சாதியினர் என்பதால் விவகாரம் திசை திரும்பிவிடக்கூடாது என அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளது.
மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் தாய் பத்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என் கண் முன்னே கார் ஏற்றி கொலை செய்தது போல் என்னுடைய குழந்தை இரத்தம் வழிய, வழிய துடிதுடிக்க இறந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக்கூடாது என நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.