
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியுடன் கிராமங்களை இணைக்கும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசுக்கு வருவாயை பெருக்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரம் உள்ளிட்ட நான்கு கிராமங்களை ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்க நகராட்சி ஆணையர், தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரசேகரபுரம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வேம்புசேகரன் பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நகராட்சியுடன் இணைப்பதால், கிராமங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் கிடைக்காமல் கிராமத்தினர் பாதிக்க வாய்ப்புள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கிராமங்களை நகராட்சியுடன் இணைப்பதா, வேண்டாமா என்பது குறித்து அரசுத்தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.