தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று (20.12.2018) இரவு பிறப்பித்த அரசாணை, ஒட்டுமொத்த இந்திய மக்களையும், அவர்களது கணினி வழித் தொடர்புகள் அனைத்தையும் குற்றச்செயல் போல் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வந்து விட்டது.
இந்திய அரசின் உளவு ஆணையம் (ஐ.பி. – IB), நடுவண் புலனாய்வுக் குழு, தேசியப் புலனாய்வு அமைப்பு, ரா (RAW), தில்லி காவல்துறை ஆணையம் உள்ளிட்ட பத்து புலனாய்வு நிறுவனங்களுக்கு இந்த பணிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
முகநூல் செயலி, ட்விட்டர், மின்னஞ்சல் உள்ளிட்ட கணினிவழித் தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்திய அரசின் உளவு நிறுவனங்களின் கண்காணிப்புக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படுவதாக இந்த உள்துறை ஆணை அறிவிக்கிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 (1)-இன் கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதாக இந்திய அரசு கூறுகிறது.
சமூக வலைத்தளம் உள்ளிட்டு கணினி வழியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவர்கள், தகவல் தளங்கள் உள்ளிட்ட அனைவரும் மேற்சொன்ன உளவு அமைப்பினர் கேட்கும்போதெல்லாம் தங்களது கணினித் தகவல்களை திறந்து காட்டவேண்டும். தொழில்நுட்ப வகையில் இந்நிறுவனங்கள் கேட்கும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தவறுபவர்கள் ஏழாண்டு வரை சிறைத் தண்டனை பெறுவார்கள் என்று இந்த ஆணை கூறுகிறது.
சமூக செயல்பாட்டாளர்களும், தேர்தல்அரசியலுக்கு வெளியே உள்ள மக்கள் இயக்கங்களும் மோடி அரசுக்கு எதிராக செய்து கொள்ளும் தகவல் பரிமாற்றங்களை - கருத்து உரையாடல்களை “இந்திய பாதுகாப்பிற்கு எதிரானது” அல்லது “பொது அமைதிக்கு இடையுறு செய்வது” அல்லது “பிற குற்றச்செயல்களை தூண்டக்கூடியது” என்று இந்திய உளவு அமைப்பினர் ஐயப்பட்டால் யாரையும் கைது செய்யலாம் என்ற வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவோ, நியூட்ரினோ ஆய்வகம், எட்டு வழிச் சாலை போன்றவற்றிலோ, மோடி அரசின் மக்கள் பகை கொள்கைகளை எதிர்த்தோ கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோர் அனைவரும் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தண்டனைக்குரிய குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர்.
அவசர நிலையை அறிவிக்காமலேயே ஒட்டுமொத்த கருத்துரிமையைப் பறிக்கும் இந்திய உள்துறை அமைச்சக ஆணையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அரசமைப்புச் சட்டத்திற்கும், தனியுரிமை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.