திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் இழப்பு குறித்து பலரும் தங்கள் துயரை பகிர்ந்துவருகின்றனர். தமிழ் திரையுலகில் தன் காலத்தில் ஆட்சி செய்தவர் கலைஞர். வயதான பிறகும் கூட 2011ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் தன் எழுத்து வாயிலாக பங்காற்றிவந்தார். அந்த சமயத்தில் கலைஞருடன் நெருங்கிப் பழகிய சிலருள் ஒருவர் பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய். அவர் கலைஞருடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்...
"கலைஞருடன் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் நான் பார்த்து வியந்த, கற்றுக்கொண்ட விசயங்கள் பல. குறிப்பாக 'இளைஞன்' படத்தின் படப்பிடிப்பு நடந்த வேளையில் அவரை தினமும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது எழுத்து, வசனம் அந்த காலகட்டத்துக்கும் ஏற்றதாய் இருந்தது. அதை விட என்னை வியப்புக்குள்ளாக்கிய விஷயம் அவருடைய சுறுசுறுப்பு, உழைப்பு. அவர் இருந்த இடத்திற்கு, வசனம் எழுத நேரம் ஒதுக்க முடிந்ததே பெரிய விஷயம். அதையும் தாண்டி, படம் எப்படி வருகிறது, ஒவ்வொரு நாளும் அன்று எடுக்கப்படவிருக்கும் காட்சிகள் என எங்களிடம் தினமும் ஆலோசிப்பார்.
அதுவும் எந்த நேரத்துக்கு தெரியுமா? காலை நாலு மணிக்கு. அதிகாலை நாலு மணிக்கு எனக்கு ஃபோன் வரும். "என்ன எழுந்திட்டியா?" என்று அந்த கரகர காந்தக்குரல் கேட்கும். நான் பதறி எழுந்து கிளம்பி அவரை சந்திப்பேன். அப்படி ஒரு உழைப்பு, அர்ப்பணிப்பு. இளைஞர்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு அவர். எனக்கு மிகப்பெரும் உத்வேகம் அவர். அவரைப் பற்றி எவ்வளவோ செய்திகள், கட்டுரைகளை படித்திருக்கிறேன். ஆனால், இன்று அவர் இல்லை என்று படிப்பதை என்னால் நம்ப முடியவில்லை. உயிர் பிரிந்த பின்பும் கூட அவரது இடத்துக்காக போராடும் போராளி கலைஞர்".