தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத; தமிழ், தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்ப் பண்பாட்டையே அழிக்க முனைந்துள்ள பாஜகவினர், நவம்பர் 6ந் தேதியன்று வேல் யாத்திரை நடத்தப் போகிறார்கள் என்றால், அது மிகக் கொடிய உள்நோக்கமன்றி வேறென்ன? எனவே பாஜகவினரின் இந்த வேல் யாத்திரையை தடை செய்யும்படி தமிழக அரசை எச்சரிக்கை செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நவம்பர் 6ந் தேதியன்று திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழ்நாட்டில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது பாஜக.
இந்த கரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது இது போன்ற அரசியல் ஊர்வலம் நடத்தினால், தமிழ்நாடு அரசின் மிகக் கண்டிப்பான உத்தரவான சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமல் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைய வழிவகுக்கும்.
அதோடு பாஜகவினரின் அந்தப் பேரணியில் அஇஅதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் உருவப் படத்துடன் கூடிய பேனர் மற்றும் பதாகைகள் எடுத்துச் செல்லப்படும். இத்தகைய அநாகரிக, வக்கிரச் செயல் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கும் அஇஅதிமுக தொண்டர்களுக்கும் கொதிப்பை உருவாக்கக் கூடும்; அதன் காரணமாகக் கலவரமும் நடக்கக் கூடும்.
சொல்லப்போனால், இப்படிக் கலவரம் நடக்க வேண்டும் எனத் திட்டமிட்டே பாஜக இத்தகைய பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடும் என்றே மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
யாத்திரை புகழ் பாஜக முன்பு நடத்திய ரத யாத்திரையால் நாட்டில் ரத்தக் களரியே ஏற்பட்டதை தமிழக அரசு நினைவுகூர வேண்டும். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக இன்றுவரை நடத்திவரும் வன்முறைச் செயல்களையும் தமிழக அரசு உணர வேண்டும். தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்துவிட்டு திசைதிருப்பினார்கள்.
திருப்பூரில் சொந்தக் கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் மற்றும் மத அடிப்படையிலான கொலை என்று விளம்பரம் செய்தது பாஜக. ராமநாதபுரத்தில் தனி நபர்களுக்கு இடையிலான மோதலை மதமோதலாகச் சித்தரித்து வன்முறையைத் தூண்ட முயன்றது பாஜக.
பாஜக நிர்வாகிகள் தங்கள் வீட்டில் தாங்களே குண்டு வீசிவிட்டு சிறுபான்மை மக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிய கதையும் உண்டு.
பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவேதான் சொல்லுகிறோம்: தமிழுக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் சம்பந்தமே இல்லாத, தமிழ்க் கடவுள் முருகன் பெயரையே வைத்துக் கொள்ளாத, தமிழை, தமிழ்நாட்டை, தமிழ்ப் பண்பாட்டையே அழிக்க முனைந்துள்ள, மதவெறி ஆதிக்கம் செலுத்தும் பாஜகவினர், நவம்பர் 6ந் தேதி வேல் யாத்திரை நடத்தப் போகிறார்கள் என்றால், அது மிகக் கொடிய உள்நோக்கமன்றி வேறென்ன? எனவே பாஜகவினரின் இந்த வேல் யாத்திரையை தடை செய்யும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.