சென்னை ராயபுரத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மினி கிளினிக்குகளில் காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்தநிலையில், முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்த மினி கிளினிக் திட்டத்தை பெற்றுத் தந்ததாக திமுக எம்.எல்.ஏ.வான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 60 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக 20 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது. அதனை வரும் 20-ஆம் தேதி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்தநிலையில் தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை கடும் முயற்சி செய்து குல்லூர்சந்தை கிராமத்திற்குப் பெற்றுத்தந்த சாத்தூர் எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனுக்கு குல்லூர்சந்தை பொதுமக்கள் சார்பில் நன்றி எனத் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது, அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.