Skip to main content

"எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

minister anbil mahesh poyyamozhi talks about erode east by election 

 

தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பேரறிஞர் அண்ணாவின்  54  ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து  காமராஜர் சிலை அருகே இருந்து  சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழகம் முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றது. பகுதி நேர பேராசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர பேராசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். அதனை வாங்கிக் கொண்டுதான் தமிழக முதலமைச்சர் வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இது குறித்து பேசினேன். குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றையெல்லாம்  நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

 

இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சரின் தலைமை அலுவலகம் எடுக்கும். நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் இருக்கும். ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. மாநகராட்சி 33 வார்டுகளில் ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலரை கொண்டுள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா? நானா? என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம். ஈவிகேஎஸ். இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும் சிறப்பாக உள்ளது. குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்