அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதி நாள் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று காலை முதல் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வாவிகனம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது,
இப்ப நடைபெறுகிற 22 எம்.எல்.ஏ.கள் வெற்றியையும் சேர்த்தால் நமக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கும். ஒரு ஆட்சி இருக்க வேண்டும் என்றால் 118 இருந்தால் தான் மெஜாராட்டி. அதனால் தானாக நம்முடைய ஆட்சி வந்துவிடும். இந்த கணக்கு எடப்பாடிக்கு தெரிந்து விட்டது. இப்போது மைனராட்சி ஆட்சி. இதை நடந்துவது மோடி தான் அவரின் தயவில் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது.
ஆனால் எப்படியும் 23ம் தேதி ஆட்சி கவிந்து விடும் என்கிற பயத்தில் ஒரு சூழ்ச்சி திட்டம் போட்டு 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தால் இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. இதை மனதில் வைத்து தான் சபாநாயகர் மூலம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பினார். இப்படி ஒரு சூழ்ச்சி பண்ணி திட்டம் போட்டதால் நான் கலைஞரின் மகன் இல்லையா? அவருடைய மூளையில் 25 சதவீதமாவது என்னிடம் இருக்கும் அல்லவா? அதனால் தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஒரு நோட்டீஸ் அனுப்பினேன்.
ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விட்டால் அதை மட்டும் எதிர்கொள்கிற மட்டுமே செய்ய வேண்டும் மற்ற வேலைகளை செய்ய கூடாது என்று தீர்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் சபாநாயகருக்கு ஒரு நோட்டிஸ் வடிவில் ஒரு ஆப்பு வைத்தேன்.
இதற்கிடையில் 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை உத்தரவு வாங்கினார்கள். ஆனால் இந்த எடப்பாடி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தடை ஆணை வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்குள்ளாக உச்சநீதிமன்றம் விடுமுறை விட்டதால் அவர்களுக்கு கெட்டநேரம் நமக்கு நல்ல நேரம். இனிமே அவர்களால் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியாது. 23ம் தேதிக்கு பிறகு மோடியே ஆட்சியில் இருக்க மாட்டார் என்பதால் இனி எடப்பாடி ஆட்சி நீடிக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு பேசினார்.