சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் குழந்தைகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் புதிய பாலங்கள் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “அவர்கள் சொல்வதுபோல் இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக எந்த குறிப்புகளும் இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு சட்ட ஆலோசகர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்ற பரிசோதனைகளிலும் கூட முழுவதுமாக பெண் மருத்துவர்கள் ஈடுபட்டு இருந்ததை டிஜிபி கூட தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
நாங்கள் ஆளுநரை பார்த்து ஒன்று தான் கேட்கிறோம். சட்ட மீறல் விதிமீறல்கள் நடந்து இருந்தால் அதை சிதம்பரம் தீட்சிதர்கள் செய்திருந்தால் சட்டம் அவர்கள் மீது பாயக்கூடாதா. சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆளுநர் தனியாவர்த்தனம் வகுத்து தந்துள்ளாரா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது” எனக் கூறினார்.