தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்காக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தயாராகிவருகிறது. ஆளும் அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவருகிறார். எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி மற்றும் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் பலரும் பல்வேறு வகையில் தேர்தல் பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையமும் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டு பின் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்து அரசியல் செய்தனர். அதன் பின்னும் விளம்பரம், பிரச்சாரப் பயணம் என இருவரும் தனித்தனியே செயல்படுவதால் இன்னும் அதிமுக ஒரே தலைமையில் இருக்குமா எனும் சந்தேகம் அக்கட்சியினர் மத்தியிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம், “சசிகலாவை 100 சதவீதம் அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பில்லை” என அறிவித்தார். தற்போது சசிகலா நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை முடிந்து வெளியே வந்து அவரது கருத்தைச் சொல்லும்போதுதான் பெரும் அரசியல் மாற்றம் இருக்கும் எனப் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.
இதனிடையே தர்மபுரியில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சியினரின் பல்வேறு இல்ல விழாக்களில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “சசிகலா விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும். அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும். முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரல்ல அவர் அதிமுகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். இந்தத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளை எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்தார்.
எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் எனும் நிலையில், கூட்டணிக் கட்சிகள் அதன் தலைமைக் கட்சியுடன் ஆலோசித்து, அதன் தொகுதிகளில் களப்பணிகளை தற்போதிலிருந்தே செய்யவேண்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில், பிரேமலதாவின் இந்த கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. சசிகலாவை நிராகரித்துவிட்டுச் செயல்படுமா அல்லது சசிகலாவை இணைத்துக்கொண்டு ஒற்றைத் தலைமையில் செயல்படுமா அல்லது சசிகலாவை முன்னிலைப்படுத்தி தினகரன் அமமுக தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்குவாரா எனப் பல கேள்விகள், கூட்டணிக் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளதால், அதிமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டணியிலே தொடரலாமா அல்லது வெளியேறலாமா எனும் குழப்பத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.