மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய ஓராண்டில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அடுத்து நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஐந்து கட்ட பிரச்சாரம் முடிந்த நிலையில், காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக தனது பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளார். ‘ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பொதுமக்களைச் சந்திக்கிறார்’ எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, “மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை எங்கள் கூட்டணிக்கு வரவேற்கிறோம். மிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் சேர வேண்டும். பிரிந்து நின்றால் அது ஓட்டுகளைச் சிதறடிக்கும்” எனக் கூறியுள்ளார்.