அமித்ஷாவோடு ஒரு போட்டோ எடுத்துவிட்டு கண்டபடி ஆட்டம் போட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
"அகில இந்திய இந்து மகா சபா' என்ற அமைப்பின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, அதே அமைப்பின் மகளிர் அணி மாநிலச் செயலாளரான நிரஞ்சனி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஸ்ரீ தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் சென்னை கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமறைவானார்.
அவர் தலைமறைவான நிலையில் அவருடைய கடந்தகால லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகண்டனாக இருந்த கோடம்பாக்கம் ஸ்ரீ, 1999-ல் நான்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். எனவே, தனது பெயரை பிலிப் ஸ்ரீகண்டன் என்று கிறிஸ்தவப் பெயராக மாற்றிக்கொண்டார்.
ஆனால், வட பழனி முருகன் கோவிலில் தனது மனைவி பெயர் நந்தினி என்றும் தன்னை இந்துவாகவும் பதிவு செய்துள்ளார். நான்ஸியுடன் கிறிஸ்தவராக வாழ்ந்த ஸ்ரீ, திடீரென இந்துத் தலைவராக உருவெடுத்தார். அவருடைய கெத்துக்காக கார் வாங்கிக் கொடுத்ததுடன், பாதுகாப்புக்கு போலீஸையும் கொடுத்து ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெக நாதன், நல்லதுரை ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இந்தக் கெத்தைக் காட்டி, டெல்லி சென்று அமித்ஷா, நிதின்கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த படங்களைக் காட்டி, கோயம்புத்தூரைச் சேர்ந்த கவுதமன் என்பவருக்கு கேஸ் ஏஜென்சி எடுத்துத் தருவதாக 20 லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றியிருக்கிறார்.
ஒருமுறை ஆந்திர அமைச்சரின் மனைவியும் மகனும் சேர்ந்து நிலம் பத்திரப்பதிவு செய்ய சென்றார்கள். அதையறிந்த ஸ்ரீ, தனது பாதுகாப்புக்கு இருந்த பி.எஸ்.ஓ. ஆட்களை அனுப்பி அவர்களை துப்பாக்கி முனையில் கடத்தியிருக்கிறார். ஆனால், பி.எஸ்.ஓ.க்களில் ஒருவர் கடத்தி வைத்திருந்த இடத்தை போலீஸாருக்கு அனுப்பினார். அதையடுத்து, 50 காவலர் கொண்ட படை அம்பத்தூர் விரைந்து கடத்தப்பட்டவர்களை மீட்டது. அந்த வழக்கு அண்ணாநகருக்கு மாற்றப்பட்டது. ஆனால், அமித்ஷா உடன் எடுத்த போட்டோவைக் காட்டி ஸ்ரீ தப்பியுள்ளார்.
இந்நிலையில் கொஞ்ச நாட்கள் கழித்து இலங்கை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளியை பூந்தமல்லி போலீஸார் கைதுசெய்தனர். அவரும் சுரேஷ் என்பவரும் நண்பர்கள். சுரேஷ் மூலமாகத்தான் அந்த குற்றவாளி தமிழகத்தில் பல கடத்தல் மற்றும் போதை மருந்து வியாபாரத்தை நடத்தியிருக்கிறார். இலங்கையிலிருந்து கப்பல் மற்றும் விமானம் வழியாக பிரவுன் சுகர், கோக்கைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை அனுப்பியிருக்கிறார். அவற்றை ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்திலிருந்து சென்னை முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்திருக்கிறார். சிறிது காலம் சென்றவுடன் குன்றத்தூர், ஐயப்பன்தாங்கல் என வியாபாரம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த வர்த்தகத்துக்கு உதவியாக இருந்தவர் ஸ்ரீ. போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை இவர்தான் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில்தான், சுரேஷ் என்பவர் ஸ்ரீயை அமித்ஷாவுடன் நெருக்கமான தொடர்பு உடைய மிகப்பெரிய ஆளாக பில்டப் கொடுத்து, இலங்கை வாழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறி அழைத்து வந்திருக்கிறார். இதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்து மகா சபாவில் பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கியதாகவும், இப்போது அவருடைய அமைப்புக்குச் சொந்தமாக டெய்லர்ஸ் சாலையில் உள்ள கட்டிடம் காஞ்சிபுரம் ஏகாம்பரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், கோவில்களுக்குச் சொந்தமான பல இடங்களை இவர் மடக்கிப் போட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீயின் வங்கிக்கணக்கு, அவருடைய கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது. சுரேஷ் என்பவரை வைத்தே பாலியல் ரீதியாகவும் மிரட்டுகிறார் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்த நிரஞ்சனி, ஸ்ரீயைப் பற்றிய எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும் என்பதால் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள். இரவுநேரத்தில் இவருடைய ஆட்கள் போன் செய்து ஆபாசமாக பேசுகிறார்கள். ஸ்ரீயை காப்பாற்றுவதே போலீஸ்தான். எனது உயிருக்கு ஆபத்து என்றால், ஸ்ரீதான் பொறுப்பு. அவர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் என்னால் வாழ முடியும். இல்லையேல் எனக்கு சாவு நிச்சயம்'' என்று அழுதார்.
"ஸ்ரீ மீது ஏற்கெனவே சூளை மேடு, மைலாப்பூர், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, தலைமறைவாக இருந்தாலும், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உதவியோடு இதிலும் தப்பித்துவிடலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுவரை அவர்மீது நடவடிக்கை பாயாமல் இருப்பதே இந்த சந்தேகத்திற்கு காரணம்'' என்கிறார்கள். கிடைத்த விவரங்கள் குறித்து கோடம்பாக்கம் ஸ்ரீயின் கருத்தை அறிய அவருடைய எண்ணுக்கு தொடர்புகொண்டோம். ஆனால், போனை எடுக்கவில்லை.