தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி மோசடியில் கைது செய்யப்பட்ட ஐயப்பன் என்பவர் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுவின் நண்பர் என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், ஐயப்பன் மற்றும் அப்பாவு இணைந்து இருக்கும் புகைப்படத்தைக் காட்டினார். அது மட்டும் இல்லாமல் இதற்கு திமுக என்ன பதில் சொல்லப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள அப்பாவு, "தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும் போது பலர் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படித்தான் ஐய்யப்பன் என்பவர் என்னுடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஐயப்பன் என்பவர் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
நான் தற்போது தலைமறைவாக இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் தான் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஹயாத் ஹோட்டலுக்கு சென்றுவருகிறார். என் அங்கு செல்கிறார் என்று அவரால் பதில் கூற முடியுமா?" என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.