தமிழக சட்டசபையில் நிறைவேறிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஆளுநர், முதல்வரை அழைத்து மசோதா குறித்து உரிய விளக்கம் கேட்டு, சுமுகமாக பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஆளுநர் ரவி, தமிழக முதல்வரை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மழை வெள்ளம் காரணமாக அந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். முதல்வருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
ஜனவரி மாதம் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்பில் ஆளுநருடன் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதேபோன்று, ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், ஆளுநரின் அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். முதல்வர் மற்றும் அமைச்சர்களாகிய நாங்கள் ஆளுநரை நேரில் சந்தித்தோம். தமிழக ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பு சுமுகமாக இருந்தது. முதல்வர் எல்லோருக்கும் மதிப்பு தருவார். அதே போல், ஆளுநரும் முதல்வருக்கும் நல்ல மரியாதை தந்தார்.
21 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதை ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் 10 மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், அந்த 10 மசோதாக்களையும் 2வது முறையாக நிறைவேற்று ஆளுநருக்கு அனுப்பியிருந்தோம். இதனை தொடர்ந்து, 20 மசோதாக்கள் ஆளுநரால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2வது முறையாக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதில் ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.
முன் விடுதலை தொடர்பாக அரசு பரிந்துரைத்த 49 கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி.யில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதற்கும் ஒப்புதல் தரக் கோரினோம். அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி. வீரமணி, விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்குப்பதிவு செய்வதற்கான மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அதை விசாரிக்க அனுமதி தர கோரினோம். கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரப்பட்ட கோப்பு 15 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. சி.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரப்பட்ட கோப்பு 7 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் கோரிகை வைத்துள்ளோம். நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.