சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது டேப் ஒன்றை எடுத்து செய்தியாளர்களிடம் காட்டியபடி பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பற்றி நேரடியாக மக்கள் சொன்ன கருத்துக்களைக் கேளுங்கள்'' என்றார். அந்த டேப்பில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தரம் குறித்த வீடியோ ஒளிபரப்பானது. தொடர்ந்து பேசிய எடப்பாடி, ''இப்படிதான் தமிழகத்தில் பல இடங்களில் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு இருக்கிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய இரண்டரை டன் வெல்லம் மிக மோசமாக, தரமற்று இருக்கிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களே ஆய்வு செய்து ரத்து செய்துள்ளனர் என்ற தகவல்கள் எல்லாம் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. ஓமலூரில் ரேஷன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி பொங்கல் வைக்கமுடியும். புளியில் பல்லி இருந்ததாகச் செய்தி வெளியானது. கொடுக்கூடிய பொருட்களின் எடையும் குறைவாக உள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களே இதற்கு போராட்டம் பண்ணியிருக்கிறார்கள்'' என்றார்.