
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பா.ம.க தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது” என தெரிவித்திருந்தார்.
ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு, பா.ம.க உள்பட தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாகவே பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமாதானம் மேற்கொள்ள படையெடுத்த நிலையில் தோல்வியே மிஞ்சியது.
அதேநேரம் நானே பா.ம.க தலைவராக தொடர்வேன் என அன்புமணி நேற்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். நேற்று அன்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தன்னைக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸின் அறிக்கையை தொடர்ந்து அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டி உள்ளார் ராமதாஸ்.
ராமதாஸின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவசர அவசரமாக தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.