
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 28வது போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று (13.04.2025) மாலை நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பு 173 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 75 ரன்களை எடுத்தார். துருவ் ஜூரெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 35 ரன்களையும், ரியான் பராக் 22 பந்துகளில் 30 ரன்களையும் எடுத்தனர். எனவே பெங்களூரு அணி வெற்றி பெற 174 ரன்களை ராஜஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது. இருப்பினும் பெங்களூரு அணி 17 ஓவர்கள் 3 பந்தில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை விளாசி அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 33 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். அதே போன்று டேவூட் படிக்கல்லும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் தனது அற்புதமான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியைச் சேர்ந்த பில் சால்ட் வென்றார்.
இந்த போட்டியில் விராட்கோலி 62 ரன்களை குவித்தன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூரு அணி 4 போட்டிகளில் வெற்றியையும், 2இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 4இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.