அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்துப் பேசுகையில், ''அதிமுக என்பது ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். இன்று மட்டுமல்ல எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொண்ட மக்கள் இயக்கம் அதிமுக. இந்த சிறிய பிரச்சனைகளை எல்லாம் தாண்டி ஆளும் கட்சியாக அதிமுக மீண்டும் வரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
குறிப்பாக இந்த காலகட்டத்தில் 99 சதவிகிதத்திற்கு மேலாக எல்லா இடத்திலும் ஒற்றைத் தலைமை என்கின்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. ஒருவலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எல்லோருடைய விருப்பம், எண்ணம். இதுதான் அடிமட்ட தொண்டர்களுடைய எண்ணம். எடப்பாடி பழனிசாமிதான் அந்த சிங்கிள் ஸ்ட்ராங் தலைமை. எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமையாக ஏற்க வேண்டும் என எல்லோரும் எண்ணுகிறார்கள். நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சொந்த நலனைத் தாண்டி கட்சி நலன்தான் முக்கியம். எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னது போல எங்கள் நலத்தையும் தாண்டி கட்சி நலத்தை மனதில் வைக்கும்பொழுது நிறைவான தீர்வு ஏற்படும். திட்டமிட்டபடி அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் எல்லாவித மாட்சியங்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும்'' என்றார்.