
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் கடந்த 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராக செயல்படுவார். 2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு” எனப் பேசியிருந்தார்.
ராமதாஸிஸ் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த முடிவுக்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மற்றொரு புறம் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை தொடர்ந்து சந்தித்து சமாதானம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியிலேயே நீடிக்கிறது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராக செயல்படுவேன்” என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியும் அறிவித்திருந்தார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் மே 11ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மாநாடு நடைபெறும் இடத்தை அன்புமணி ராமதாஸ் இன்று (13.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, திருக்கச்சியூர் ஆறுமுகம் என ஏராளமானோர் அவருடன் வந்திருந்தனர். அப்போது தொண்டர்கள் அமருவதற்கான இடம், மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை அன்புமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இது பா.ம.க.வின் உட்கட்சி விவகாரம். ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவருடைய கொள்கையை நிலைநாட்ட பா.ம.க.வை ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ம.க.வினர் ஒன்றாக சேர்ந்து கடுமையாக உழைப்போம்” எனப் பேசினார். இதற்கிடையே அன்புமணி இல்லத்திற்கு முகுந்தன் பரசுராமன் வருகை தந்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிக்க அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.