2009-ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் ஆளும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,
பொதுவாக எதிர்க்கட்சிகள்தான் கண்டன ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்துவார்கள். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கின்ற அதிமுக புரட்சித் தலைவர்களின் வழிவந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிற புரட்சியை அரங்கேற்றியிருக்கிறது என்று நான் கருதுகிறேன். அல்லது அவர்களே திமுகதான் ஆளும் கட்சி என்று உள்ளுக்குள் நினைக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.
அடுத்ததாக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதின் அடிப்படை ஈழத்தமிழர்களுக்காக. என்ன பெரிய வேடிக்கை, வேதனை என்றால், ''யார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இங்கே அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும்'' என்று சொன்னாரோ, அவரை தலைவியாக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் இன்றைக்கு ஈழத்துக்காக பேசுகிறோம் என்பது சற்றும் நம்ப முடியாததாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் எதையும், எப்போதும் ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு ஒரு தகுதியும் வேண்டும், ஒரு நேரமும் வேண்டும். இரண்டுமே அதிமுகவுக்கு இப்போது இல்லை என்பதுதான் உண்மையான நிலவரம்.
இன்றைக்கு திடீரென்று ஈழச்சிக்கலை கையில் எடுக்க வேண்டிய தேவை என்ன? ஈழத்திற்கு திமுக ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படியெல்லாம் அந்த மக்களுக்கு உதவியாக இருந்தது என்பது குறித்து நான் தனியாக ஒரு நூலே எழுதியிருக்கிறேன். இப்போதும் அவற்றிலிருந்து பல செய்திகளை நாம் சொல்ல முடியும்.
2009ல் ஈழத்தில் நடைப்பெற்ற யுத்தத்தில் தலைவர் கலைஞர் தடுக்கவில்லை என்பதைப்போல யதார்த்தத்துக்கு புறம்பான ஒரு வாதம் இருக்க முடியாது. ஈழப்போர் ஏறத்தாழ ஒரு சர்வதேச சிக்கலாக மாறியதற்கு பிறகு உலகத்தின் வல்லரசுகளான பிரிட்டனும், பிரான்ஸும் முயற்சித்தே அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி பெறாதபோது, இந்தியாவினுடைய ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் நினைத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம் என்பது அபத்தம் மட்டும் இல்லை. அது உள்நோக்கம் உடைய ஒரு கூற்றும் ஆகும்.
ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு அதனைப் பற்றி ஒரு ஆர்ப்பாட்டத்தை ஆளும் கட்சி நடத்துகிறது என்பது ஒரு விதமான கேலிக்கூத்துதான். அந்த ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு ஈழச் சிக்கலைப் பற்றி எந்த அளவுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.
ஈழத்தைப் பற்றி அவர்களை பேச சொன்னால் யார் யார் எந்தளவுக்கு வரலாற்று உண்மைகளை சொல்லுவார்கள் என்பதும் தெரியவில்லை. ஏதோ ஒன்றைப் பற்றி பேச வேண்டும். இன்றைக்கு இருக்கிற பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடாது. 9 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரச்சனையைப் பற்றி இப்போது பேச வேண்டும் என்றால், இப்போது இருக்கிற பிரச்சனையைப் பற்றி பேசாதீர்கள், குட்காவைப் பற்றி பேசாதீர்கள், அடிமைத்தனமாக ஆட்சி இருப்பதைப் பற்றி பேசாதீர்கள், நீட் தேர்வைப் பற்றி பேசாதீர்கள், 2009ல் நடந்த ஈழப்போர் பற்றி பேசலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதுதான் அவர்களின் ஈழப்பாசத்திற்கு காரணம்.
அவர்களை மக்கள் நம்பமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே நம்ம மாட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் ஒட்டுமொத்த மக்களால் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து பேசி மக்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியதில்லை என்றும் தோன்றுகிறது.