கடலூர் அஞ்சலையம்மாள் மகன் ஜெயவீரன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தென்னாட்டு ஜான்சி ராணி என்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் புதல்வர் ஜெயில்வீரன் என்கிற ஜெயவீரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
விடுதலைப் போராட்டத்தில் அஞ்சலையம்மாளின் வீரமும், தியாகமும் போற்றத்தக்கவை. விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றது மட்டுமின்றி, அதற்காக தமது வீடு உள்ளிட்ட சொத்துகளையும் விற்று செலவிட்டார். கொடுங்கோல் வெள்ளையன் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அஞ்சலையம்மாள், தமது 9 வயது மகள் அம்மாக்கண்ணுவையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி தம்முடன் சிறைக்கு அழைத்துச் சென்றார்.
1937-ஆம் ஆண்டு தான் கருவுற்றிருந்ததையும் பொருட்படுத்தாமல் வெள்ளையரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய அஞ்சலையம்மாள், அதற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பிறந்தவர் தான் ஜெயவீரன் ஆவார். சிறைக் காலத்தில் பிறந்ததால் ஜெயில் வீரன் என்று பெயரிடப்பட்ட அவர் பின்னாளில் ஜெயவீரன் என அழைக்கப்பட்டார்.
தாயைப் போலவே வீரம் மிக்கவராக திகழ்ந்த ஜெயவீரன் அவர்களும் தாய் வழியில் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். நாட்டுப்பற்றும், இனப் பற்றும் மிக்க ஜெயவீரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு கூறியுள்ளார்.