முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மீண்டும் அ.தி.மு.க. சார்பில் சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது அ.தி.மு.க. தலைமை.
இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாகப் போட்டியிடுவது என முடிவுசெய்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று (18/03/2021) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் தோப்பு வெங்கடாச்சலம். இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தோப்பு வெங்கடாச்சலம், "அ.தி.மு.க.வில் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு தருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட தற்போதைய வேட்பாளர் ஜெயக்குமாரை ஏன் நீக்கவில்லை. நான் அ.தி.மு.க.வில் உறுப்பினராகத்தான் உள்ளேன்; என்னை நீக்க முடியாது" என்றார்.