சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உத்தரப் பிரதேசத்தில் பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர் முன்னாள் பிரதமர் வி.பி. சிங். அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் சமூகநீதிக் காவலர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர். தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தவர்.
காவிரி நீருக்காக நடுவர் நீதிமன்றம் அமைத்துக் கொடுத்தவர் வி.பி. சிங். பெரியாரை உயிரினும் மேலான தலைவராக நினைத்தவர். மேலும் கலைஞரை தனது சொந்த சகோதரரைப் போல் மதித்தவர் வி.பி.சிங். கொள்கைக்காக லட்சியத்திற்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என வி.பி.சிங் பாராட்டியுள்ளார்.
1988ல் தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது அவர் என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும்” எனக் கூறினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.