
மசூதிக்கு வெளியே 38 வயது பெண் ஒருவர், நான்கைந்து ஆண்கள் கொடூரமாகத் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சன்னகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஜமீல் அகமது சமீர். இவரது மனைவி ஷபினா பானு (38). கடந்த 7ஆம் தேதி ஷபீனா பானுவின் உறவினர் பெண்ணான நஷ்ரீன் (32) என்பவர், ஷபீனாவை பார்க்க வந்துள்ளார். இரண்டு பெண்களும் வெளியே சென்று விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். அதன் பின்னர், இருவரும் வீட்டில் தங்கி கொண்டிருந்த நேரத்தில் ஃபயாஷ் என்ற நபர் ஷபீனாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ஜமீல் அகமது சமீர், மூன்று பேரும் வீட்டில் இருப்பதை கண்டு கோபமடைந்துள்ளார். இதில் சந்தேகமடைந்த அவர், இது குறித்து உள்ளூர் மசூதி நிர்வாகத்திற்கு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷபீனா பானு, நஷ்ரீன் மற்றும் ஃபயாஷ் ஆகிய மூவரும் மசூதிக்கு வரவழைக்கப்பட்டனர்.
அங்கு சென்றவுடன் ஒரு ஆண்கள் குழு, மசூதிக்கு வெளியே வைத்து ஷபினாவை குச்சிகள், பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் தடிகளால் கடுமையாக தாக்கினர். கற்களை கொண்டு எரிந்து கொடூரமாகத் தாக்கினர். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார். மசூதிக்கு வெளியே பெண்ணை, ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஷபினா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், முகமது நியாஷ், முகமது கவுஸ்பீர், ஜண்ட் பாஷா, இனாயட் உல்லா, தஸ்டகீர் மற்றும் ரசூல் ஆகிய 6 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.