
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தான் செய்த செயல் குறித்து போதுமான அறிவு இருந்தது எனக் கூறி போக்சோ வழக்கில் கைதானவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நேவி மும்பைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த 2019ஆம் ஆண்டின் போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி சிறுமி, தனது காதலனை தொடர்ந்து சந்தித்துப் பேசியுள்ளார். இதற்கிடையில், அந்த இளைஞர், சிறுமியை பாலியல் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆகஸ்ட் 8 2020இன் போது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவரும் இல்லை என்பதை உணர்ந்தார். இரண்டு நாட்கள் கழித்து, தனது காதலனின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பதாக தனது தந்தைக்கு சிறுமி போன் மூலம் கூறியுள்ளார். அதன் பிறகு, சிறுமியின் தந்தை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, மே 2021இன் போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு, உத்தரப் பிரதேசத்திற்கு சென்று தனது மகளை மீட்டு இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், உத்தரப் பிரதேசத்திற்கு சென்ற இருவரும் அங்கு ஒன்றாக தங்கியுள்ளனர். அதன் மூலம், சிறுமி கர்ப்பமான பிறகு இளைஞர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், இளைஞரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அந்த இளைஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு, மும்பை நீதிமன்ற நீதிபதி மிலிண்ட் ஜாதவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, ‘இந்த வழக்கில், தான் என்ன செய்கிறோம் என்பது குறித்து போதுமான அறிவும் திறனும் அந்த பெண்ணுக்கு இருந்துள்ளது. அதனால் தான் பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னார்வத்துடன் இளைஞருடன் சென்றுள்ளார். மேலும், அவர்கள் இருவரின் சம்மதத்துடன் தான் உடலுறவு நடந்திருக்கிறது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கும் அந்த ஆணுக்கும் இடையே காதல் காரணமாக தான் ஒருமித்த உடலுறவு நடந்துள்ளது.
காவல்துறை முன்பும், மருத்துவ பரிசோதனையின் போதும் சிறுமி அளித்த வாக்குமூலங்களில் எந்த வேறுபாடும் இல்லை என்பது தெரிகிறது. சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் ஆணுடன் ஓடிப்போய் 10 மாதங்கள் அவருடன் தங்கியிருந்தார். 18 வயதுக்குக் குறைவானவராக இருந்தபோதிலும், அவர் தனது செயல்கள் மற்றும் முடிவுகளில் தெளிவாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருப்பதாக சிறுமி தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தெரிவித்த பிறகும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டத்தின் விதிகள் இயற்கையில் கடுமையானவை என்றாலும், நீதியின் நோக்கங்களைப் பாதுகாப்பதற்காக ஜாமீன் வழங்குவதையோ அல்லது மறுப்பதையோ நீதிமன்றம் தடுக்காது’ என்று கூறி அந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.