Published on 21/08/2019 | Edited on 21/08/2019
ஜெயலலிதா இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்தது. அப்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறை சென்றதும் அதிமுகவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பின்பு தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சியில் செந்தில் பாலாஜி இருந்தார். பின்பு திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட போது கரூர் மாவட்ட ஆட்சியருக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே ஒத்து போகவில்லை என்று சொல்லப்படுகிறது.
தற்போது வரை கரூர் மாவட்ட ஆட்சியர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி, அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1000 கன அடி தண்ணீரை 2,000 கன அடியாக உயர்த்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ஆனால், ஆட்சியர் இதனை கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. திமுக தலைமையும் செந்தில் பாலாஜிக்கு அனுமதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆட்சியரை எதிர்த்து கரூரில் தனது ஆதரவாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த செந்தில்பாலாஜி தயாராகி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.