
'மாநில சுயாட்சியை உறுதி செய்ய; ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்' என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் நீட், ஜிஎஸ்டி, புதிய தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், ''மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்பட்ட வரும் இந்த சூழ்நிலையில் கூட்டாட்சி கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய மாநில அரசின் உறவுகளை அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி கூறுகள்; நடைமுறையில் உள்ள சட்டங்கள்; ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வும் குழு ஒன்றினை அமைப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ரெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்றைக்கு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்திருக்கிறார்கள். அதாவது மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும்; சுயாட்சி வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை ஏற்க இயலாது. மாநிலங்களுக்கு தனியாக சுயாட்சி மற்றும் முழு அதிகாரம் கொடுக்க முடியாது என்பது தான் பாஜகவுடைய கருத்து. அதனடிப்படையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்'' என்றார்.