Skip to main content

'மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்மட்டக் குழு '-விதி 110 கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்

Published on 15/04/2025 | Edited on 15/04/2025
'High-level committee to ensure state autonomy' - CM issues notification under Rule 110

'மாநில சுயாட்சியை உறுதி செய்ய; ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும்' என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''நமது இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்டது. பல்வேறு மொழிகள்; இனங்கள்; பண்பாடுகள்; பழக்க வழக்கங்களை கொண்டுள்ள மக்கள்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதை பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். நம் நாட்டு மக்களின் நலன்களை போற்றி பாதுகாக்கின்ற வகையில் அதற்கான அரசியல் அமைப்பையும் நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கியவர்கள் ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி கருத்துகளை நெறிமுறைகளை கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஒன்றிய அரசிடம் போராடிப்பெற வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை வேதனையோடு பதிவு செய்கிறேன். பறந்து விரிந்த இந்த இந்திய நாட்டை மொழிவாரி  அடிப்படையில் உருவான மாநிலங்கள் தான் ஒற்றுமையாக காத்து வருகின்றன. இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும்  கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் இந்தியாவும் வலிமை பெறும்.

நீட் தேர்வு மூலம் பொதுக்கல்வி முறை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள இன்னல்களை களையும் விதமாக இந்த சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாநில பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மும்மொழிக் கொள்கை என்ற  போர்வையில் இந்தி மொழியை மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்க ஒன்றிய அரசு முற்படுகிறது. நாம் பங்களிக்கும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நிதிப்பகிர்வாக தமிழகத்திற்கு கிடைக்கிறது. ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு போதுமான அளவில் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று இந்தியாவின் அனைத்து மாநில உரிமையை காக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றிருக்கிறோம்.

மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்பட்ட வரும் இந்த சூழ்நிலையில் கூட்டாட்சி கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய மாநில அரசின் உறவுகளை அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி கூறுகள்; நடைமுறையில் உள்ள சட்டங்கள்; ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வும் குழு ஒன்றினை அமைப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ரெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்