கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், ‘30000 கோடி ரூபாயை திமுக குடும்பத்தில் எப்படி கையாள்வது என தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்’ எனச் சொன்னார். அதனைத்தான் புகாராக எடுத்துக் கொண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 50 ஆயிரம் அதிமுகவினர் ஆளுநரிடம் புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால் இந்த திமுக அரசின் காவல்துறை, ஐம்பது கார்கள் மற்றும் பேருந்துகளை கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், தலைநகர் சென்னையில், 50 ஆயிரம் பேர் வர இருந்த பேரணியில், ஐந்து லட்சம் பேர் கூடி ஒரு மாபெரும் சரித்திரத்தை எடப்பாடி தலைமையில் நடத்தினோம். இந்தியா முழுக்க இது தலைப்பு செய்தி ஆனது.
திமுக அரசு வீட்டுக்குப் போகிற நாளும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்கும் நாளும்தான் எங்களுக்கு பொன்னான நாள் என்று மக்கள் கைகளில் பதாகைகளை ஏந்திக் கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி செல்லாத கட்சியே இல்லை. முதலில் மதிமுகவில் இருந்தார். திமுகவில் இருந்தார். அதிமுகவில் இருந்தார். டிடிவி தினகரன் கட்சிக்கு சென்றார். மறுபடியும் திமுகவிற்கு சென்றார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடுகிறது . இதனால் 25 அப்பாவி உயிர் பறிபோயிருக்கிறது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜப்பானில் இருந்து நீங்கள் வருவதற்கு தயாரா" எனப் பேசினார்.