பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசினர்.
இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டமானது சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பெங்களூருவில் நடைபெற இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிரணியை கட்டமைப்பது குறித்து அடுத்தகட்டமாக ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பெங்களூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிவதால் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கான இடம் மாற்றப்பட்டுள்ளது. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பற்றி அறிந்த பிரதமர் மோடி கலக்கமடைந்திருக்கிறார் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.