ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அதிமுக தொண்டர்கள் பேரணியாக சென்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அண்ணாசாலை வழியாக நடைபெற்ற இந்த பேரணியில் அதிமுக தொண்டர்கள் பலரும் கருப்பு உடையணிந்து கலந்துகொண்டனர். இந்த நிலையில் தஞ்சையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க உத்தரவு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது பற்றி விசாரித்த போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு, தஞ்சையில் மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் சாலையில் சொந்தமாக வீடு மற்றும் காலியிடம் ஒன்று உள்ளது.இந்த வீடு யாரும் தங்க முடியாத அளவுக்கு இடியும் நிலையில் இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்த வீட்டுக்குக் கடந்த செப். 17ஆம் தேதி மாநகராட்சி நிா்வாகம் அறிவிப்பாணை வழங்கியது. அதில், இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இக்கட்டுமானம், அந்த வழியே செல்பவா்களுக்கும், கட்டடத்தைப் பயன்படுத்துபவா்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இக்கட்டடம் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கும், பள்ளிக்கும் அருகில் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி அந்த வீட்டில் தங்கியிருந்த மனோகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் சசிகலாவிற்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனையடுத்து 15 நாட்களுக்குள் கட்டடத்தை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் அந்த நோட்டீசில் கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை கட்டடம் அப்புறப்படுத்தப்படாததால், மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் ஒரு நோட்டிஸ் ஒட்டியுள்ளது. அதில் கட்டடம் அபாயகரமான நிலையில் உள்ளதால், அதற்குள் செல்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூரில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.