
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ‘கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் நிறைவு பரிசு விழா நேற்று (12-04-25) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “கம்பராமாயணத்தில் பெண்களை போற்றி இருக்கிறார்கள். ஆனால், இப்போது கம்பன் காட்டிய பாதையை அழிக்கிறார்கள். சனாதன தர்மத்தை மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி பேசுவது என்பது கலாச்சார இனப்படுகொலை தான். ஆளுங்கட்சியில் ஓர் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுகிறார். பெண்களை மட்டுமின்றி, சிவன் மற்றும் விஷ்ணுவை வணங்குபவர்களின் நம்பிக்கையை அவமதித்து பேசுகிறார். சர்ச்சையாக பேசியவர் தனிநபர் மட்டுமல்ல; இங்குள்ள சூழல் அமைப்பில் உள்ள ஒரு புள்ளிதான்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் 'ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஸ்ரீ ராம்...' என மேடையில் முழக்கமிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்த மாணவர்களையும் 'ஜெய் ஸ்ரீராம்..' என கோஷமிட சொன்னார். ஆளுநர் சொன்னதை தொடர்ந்து மாணவர்களும் 'ஜெய் ஸ்ரீராம்..' என கோஷமிட்டனர். இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மாணவர்களுக்கு எந்த ஒரு மதம் சார்ந்த சுலோகங்களையும் கூறச் சொல்லியும் கட்டாயப்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கல்விமுறை பாடத்திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு எந்தவொரு புரிதலும் இல்லை. ஆளுநர் அறியாமையால் தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் நிர்பந்தம் செய்ததால் மட்டுமே மாணவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்...' என கோஷம் எழுப்பினர். அவ்வாறு அவர்கள் கூறாமல் இருந்திருந்தால் பயிலும் கல்லூரிக்கு நெருக்கடி வந்திருக்கலாம். ஆளுநர் பேசியது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. அரசியல் சாசனத்தை மீறிய ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.