
கோவை ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்துவ மதபோதகரான இவர் பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார். குறிப்பாக கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமாகி இருந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின் பொழுது அதில் கலந்து கொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என போலீசார் சந்தேகிப்பதால் கோவை காவல்துறை சார்பில் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது.
பல இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், மூணாறில் வைத்து போலீசார் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜ் கோவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி வைத்த நிலையில் அதற்கு ஒவ்வொன்றுக்கும் ஜான் ஜெபராஜ் பதில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி நந்தினி தேவி, ஜான் ஜெபராஜை வருகின்ற ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரும் பட்சத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஜான் ஜெபராஜ்க்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜை கோவை மத்திய சிறையில் அடைப்பதற்கான பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.