
தங்க நகை வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தை கூறி 80 சவரன் நகையும், 41 லட்சம் பணமும் நூதன முறையில் மோசடி நடந்துள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (எ) யுவஸ்ரீ. இவருக்கும் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு - ஷர்மிளா தம்பதியினரின் மகன் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 21.8.2020 -ல் திருமணம் நடந்துள்ளது. விக்னேஷ். ராமச்சந்திரா மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புவனேஸ்வரியின் மாமியார் ஷர்மிளா திருவள்ளூர் நகர காவல் நிலையம் காந்திரோடு பகுதியில் வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இதனால் புவனேஸ்வரியின் உறவினரான சரிதா என்பவருடைய குழந்தைகளை அந்த டியூஷனுக்கு அனுப்பியதின் பெயரில் தினமும் சரிதா அங்கு வந்து சென்று கொண்டிருந்தார். இதனால் இவர்களுக்கிடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த நான்சி (எ) சுந்தரியும் அவருடைய குழந்தைகளை அந்த டியூஷனில் சேர்த்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே நல்ல பழக்கவழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த 14.10.2022 அன்று புவனேஸ்வரி வீட்டில் இருந்த போது அங்கு வந்த சரிதா என்பவர் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சரிதாவுடன் நான்சி (எ) சுந்தரி மற்றும் அவருடைய சகோதரி ஷீபா என்கிற குபேந்தரி ஆகியோரும் வந்துள்ளனர். அப்போது நான்சி( எ) சுந்தரி மற்றும் அவருடைய சகோதரி ஷீபா (எ) குபேந்தரி ஆகியோர் தங்கம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது என்று சரிதா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி புவனேஸ்வரியையும் அவரது மாமியார் ஷர்மிளாவையும் நம்ப வைத்துள்ளனர்.
இதனால் நம்பிக்கை மோசடி செய்யும் நோக்கத்தோடு ஏமாற்றியதோடு கணவர் விக்னேஷ்-க்கு தெரியாமல் கொடுத்தால் 2 மாதத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ 41 லட்சம் ரொக்கம் மற்றும் 80 சவரன் தங்க நகையையும் நான்சி (எ) சுந்தரி, ஷீபா (எ)குபேந்தரி, சரிதா ஆகியோர் வாங்கி சென்றுள்ளனர்.
ஆனால் வாங்கிய நாளிலிருந்து பணத்தையும் தராமல் அதற்கான லாபத்தையும் தராமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரி கேட்டதற்கு நான்சி (எ)சுந்தரி ஷீபா, சரிதா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் நான்சி)எ)சுந்தரியின் கணவர் பரிமள செல்வம் என்பவர் நீதிமன்ற ஊழியராக இருப்பதால் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டியுள்ளனர்.
இது குறித்து புவனேஸ்வரி திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் மோசடி செய்து ரூ. 41 லட்சம் ரொக்கம் மற்றும் 80 சவரன் நகையை மோசடி செய்த வழக்கில் நான்சி(எ)சுந்தரி, சரிதா ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ஷீபா (எ) குபேந்தரி மற்றும் நான்சி (எ)சுந்தரியின் கணவர் பரிமள செல்வம் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.