முதியவர்களுக்கு கரோனாவால் ஆபத்து அதிகம் எனக் கூறப்படும் நிலையில், கரோனா பாதிக்கப்பட்ட மூன்று முதியவர்களை ராஜஸ்தான் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று கரோனா பாதித்த முதியவர்கள் குணமாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சவாய் மான்சிங் மருத்துவமனை மருத்துவர்கள், "வெற்றிகரமாக கரோனா வைரஸ் நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளோம். இதற்கு எச்ஐவி, மலேரியா, ஸ்வைன் ப்ளூ ஆகியவற்றிற்குக் கொடுக்கப்படும் மருந்துகளைக் கலவையாகப் பயன்படுத்திக் கொடுத்தோம். அதாவது லோபினாவிர், ரிடோனாவிர் ஆகிய இரு மருந்துகளைக் கலவையாகப் பயன்படுத்திக் குணப்படுத்தியுள்ளோம். நாங்கள் பயன்படுத்திய மருந்துகளை இந்திய மருத்துவக் கவுன்சிலான ஐசிஎம்ஆர் அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் இந்த வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "சவாய் மான்சிங் மருத்துவமனையில் 2 முதியவர்கள் உள்பட 3 கரோனா நோயாளிகளை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. வெற்றிகரமாக கரோனா நோயாளிகளை ஜெய்ப்பூர் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
இந்தச் செய்தி மன உளைச்சலில் இருக்கும் பலருக்கும் நிம்மதியளிக்கும். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தி அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும்" என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.